நிக்கவரெட்டி பிரதேசத்தில் கடந்த தேர்தல் தினத்தன்று கடத்திச் செல்லப்பட்ட 20 வயதுடைய யுவதி ஒருவர் பொல்பித்திகம பிரதேச வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவ்யுவதியுடன் இரு சந்தேகநபர்களை கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனுடன் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக நிக்கவரெட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன்பொல பிரதேசத்தைச்  சேர்ந்த குறித்த யுவதி கொழும்பு பிரதேசத்தில் தொழில் செய்து வருபவர் என்றும், கடந்த 16ஆம் திகதி வாக்களிப்பதற்காக வீட்டுக்கு வந்து பின்னர் நிக்கவரெட்டி இஹலகம பிரதேசத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டடுள்ள சந்தேகநபர்கள் அவ்வீட்டுக்குச் சென்று வேன் ஒன்றில் அவ் யுவதியைக் கடத்திச் சென்றதாக குறித்த யுவதியின் சகோதரியினால் நிக்கவரெட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர், குறித்த யுவதியின் முன்னை நாள் காதலர் என்றும், மாஹோ பிரதேசத்தில் வாடகைக்குப் பெறப்பட்ட வேனில் இரண்டு நண்பர்களின் ஒத்துழைப்போடு அவ் யுவதியைக் கடத்திச் சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட யுவதி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் மற்றும் வேனின் சாரதி ஆகியோரை நேற்று முன்தினம் நிக்கவரெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிக்கவரெட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.