வவுனியா ஓமந்தை மாளிகை பகுதியில் அமைந்துள்ள காட்டு விநாயகர் ஆலய காணியில் உள்ள புராதன சின்னங்களைச் சேதப்படுத்தியதாகத் தெரிவித்து ஓமந்தை பொலிஸாரால்  மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள காட்டு விநாயகர் ஆலயம் அப்பகுதி மக்களால் நீண்ட காலமாக வழிபடப்பட்டு வருகின்றது. ஆலயத்திற்கான கட்டடம் நீண்டகாலமாக அமைக்கப்படாத நிலையில் பல வருடங்களிற்கு முன்னர் வைக்கப்பட்ட கற்சிலை ஒன்றினை அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதமளவில் குறித்த ஆலய வளாகப்பகுதியில் அப்பகுதி மக்களால் டோசர்மூலம் துப்பரவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  குறித்த பகுதியில் தொல்பொருள் எச்சங்கள் இருப்பதாகவும், புரதான சின்னங்களை அழிக்கும் வகையில் துப்பரவுப்பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஓமந்தை பொலிஸாருக்கு, தொல்பொருள் திணைக்களத்தால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்தமாதம் 31 ஆம் திகதி அவர்களை விசாரணைக்கு அழைத்த ஓமந்தை பொலிஸார் ஆலயத்தின் நிர்வாகம் சார்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள காணியின் உரிமையாளர், மற்றும் டோசர் சாரதி ஆகியோரை கைது செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் வவுனியா நீதவான் நீதி மன்றில் எடுத்துக்கொள்ளப் பட்டது. இதன்போது புரதான சின்னங்களைச் சேதப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டமைக்காக கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் தலா 50ஆயிரம் வீதம் 1,50,000 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு  அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.