சுயாதிபத்தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்கை சீனாவுடன் பணியாற்றுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது என்ற போதிலும் பெய்ஜிங்குடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், இந்தியா அதன் செல்வாக்கைப் பிரயோகிக்கும் என்பதை தெளிவாகக்கூறிவிடவேண்டும் என்றும் சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்ஷக்கள் மீண்டும் செல்வதற்கு அனுமதித்து இந்தியா தவறிழைத்துவிடக்கூடாது என்றும் இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்தியிருக்கின்றன.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எதிர்கால உறவுமுறைகள் தொடர்பில் இந்துஸ்தான் ரைம்ஸும் டெக்கான் ஹெரால்டும் இன்று புதன்கிழமை ஆசிரிய தலையங்கங்களை தீட்டியிருக்கின்றன.

' இலங்கையில்  பலவான் ' என்ற தலைப்பில் டெக்கான் ஹெரால்ட்  அதன் ஆசிரிய தலையங்கத்தில் கூறியிருப்பதாவது ;

 ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவின் நிறைவான வெற்றி இலங்கையின் ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறியைக் காட்டவில்லை.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய இலங்கையின் உள்நாட்டுப்போரில் அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமானவர் என்று பரவலாக புகழப்படுகிறார். ' கண்டிப்பான மனிதர் ' என்ற அவரது படிமம் தேர்தல் வெற்றியில் பெரும் பங்கை வகித்தது.

இவ்வருடம் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் மேற்கொண்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் 250 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.கோதாபயவின் தேர்தல் பிரசாரம் தேசிய பாதுகாப்பு மீது கவனத்தைக் குவித்தது மாத்திரமல்ல, முஸ்லிம் தீவிரவாதத்தைத் தோற்கடிக்க சிறந்த வேட்பாளராக அவரை முன்னிலைப்படுத்தவும் செய்தது.சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பெருமளவுக்கு எடுபட்ட இந்தச் செய்தி அவரின் தேர்தல் வெற்றிக்கு பங்களிப்பைச் செய்தது. 

கோதாபய மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்ற கருத்துக்களைக் கொண்ட ஒருவர்.சிங்கள பௌத்தர்களினால் போர் வெற்றி நாயகன் என்று அவர் போற்றப்படுகிறார்.ஆனால், இன, மத சிறுபான்மையினத்தவர்களும் முற்போக்கு -- தாராளவாத போக்குடைய இலங்கையர்களும் அட்டூழியங்களையும் போர்க்குற்றங்களையும் அவர் செய்ததாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.எதிர்க்கருத்து கொண்டவர்களின் குரல்வளையை நசுக்குவதற்கும் ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படடுத்துவதற்கும் மக்களின் உரிமைகளை மீறுவதற்கும் தயங்காத ஒரு எதேச்சாதிகார ஜனாதிபதியாக அவர் இருப்பார் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவலை வெளிப்படுத்தப்படுகிறது.

கொழும்பில் மீண்டும் ராஜபக்சாக்கள் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பது இந்தியாவுக்கு கவலையைக் கொடுக்கும்.விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவை வழங்கிய காரணத்தினால் ராஜபக்ச சகோதரர்களுடனான இந்தியாவின் உறவுகள் பலமானவையாக இருந்தபோதிலும், அவர்கள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டதை அடுத்து உறவுகள் கசப்படைய ஆரம்பித்தன.

சர்வதேச மனித உரிமைகள் மன்றங்களில் இலங்கைக்கு பெய்ஜிங் ஆதரவை வழங்கியதையடுத்து ராஜபக்சாக்கள் சீனாவுடன் மேலும் நெருக்கமாகிக்கொண்டார்கள்.சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில் மிகவும் உற்சாகமான ஒரு பங்காளியாக இலங்கை மாறியது.சீனாவின் நீர்மூழ்கிகளும் போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் வந்து தரித்து நிற்பதற்கும் கூட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதித்தது.போர்க் குற்றங்களுக்காக பொறுப்புக்கூறல்,  மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் மேற்குலக நாடுகள் நெருக்குதலைக் கொடுக்குமானால் கோதாபய ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் சீனாவின் பக்கமாக சாயும் என்று எதிர்பார்க்கலாம்.

பொதுவில் இலங்கையுடனும் குறிப்பாக ராஜபக்சாக்களுடனுமான சீனாவின் பலம்பொருந்திய பிணைப்பு கவலை தருவதாகும்.இலங்கையின் தலைவர்களையும் அதிகாரிகளையும் நெருக்குவாரத்துக்குள்ளாக்குவதன் மூலமாக அந்த பிணைப்பை பலவீனப்படுத்திவிட முடியாது. பதிலாக இலங்கையில் முதலீடுகளைச் செய்வது தொடர்பிலும் உட்கட்டமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதது தொடர்பிலும் தீர்மானங்களை எடுப்பதை துரிதப்படுத்துவதன் மூலம் இந்தியா பயனடையமுடியும்.இந்தியா முன்னெடுக்கும்  உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களில் பெருமளவானவை தமிழ் வடக்கு மாகாணத்தியேயே இடம்பெறுகின்றன. இலங்கையின் ஏனைய பகுதிகளில்  குறிப்பாக சிங்கள பகுதிகளில் மக்கள் பயனடையக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நேசக்கரத்தை நீட்டினால் அயலார் மற்றும் பங்காளி என்ற இந்தியாவின் படிமம் மேம்படும்.இலங்கை கேந்திரமுக்கியத்துவ அடிப்படையில் முக்கியமானது.சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்சாக்கள் மீண்டும் சென்றுவிட அனுமதித்து இந்தியா மீண்டும் தவறிழைக்கக்கூடாது.அவ்வாறு செய்வது இந்தியாவுக்கு கட்டுப்படியாகாது.

இந்துஸ்தான் ரைம்ஸ்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது விடுதலை புலிகளுடனான உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாண்ட கோதாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார்.தென்னிலங்கையின் சிங்கள பெரும்பான்மையினரின் பரந்தளவிலான ஆதரவை பெற்றிருக்கும் கோதாபய, அதை பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களடமிருந்து வெளிக்காட்டப்பட்ட எதிர்ப்பை சரியீடு செய்யக்கூடியதாக இருக்கும். அவரது வருகை கொழும்பில் புதிய அரசாங்கம் ஒன்றின் வருகையை மாத்திரமல்ல, சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற ஒரு இலங்கைக்கான இடவெளியின் குறுகலையும் குறித்து நிற்கிறது.

இந்தியா ஒரு சங்கடமான நிலையில் இருக்கிறது.ஐந்து வருடங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை பதவிகவிழ்ப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அன்றைய எதிரணி கூட்டுச்சேருவதை இந்திய தீவிரமாக ஆதரித்தது. இந்தியா அவ்வாறு செய்ததற்கு இரு காரணிகள் தூண்டுதலாக இருந்தன. சீனா நோக்கிய புவிசார் அரசியல் சாய்வுக்கு ராஜபக்சாக்களின் செயற்பாடுகள் உதவின. அரசியல்ரீதியில் சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற இலங்கையொன்றை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ராஜபக்சாக்களின் கடுமையான  தமிழர் விரோதப் போக்கு எதிரானதாக இருந்தது.

ஆனால், ராஜபக்சவை தூக்கியெறிந்துவிட்டு மைத்திரி -- ரணில் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி நொய்தானது என்பது இந்தியாவுக்கு தெரிந்திருந்தது.இரு தலைவர்களும் ஒத்துப்போகவில்லை.பொருளாதாரமும் முன்னேற்றம் காணவில்லை.ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பெரிதும் பாதித்தது.எந்த நேரத்திலும் ராஜபக்சாக்கள் ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிடுவர் என்ற நிலையே காணப்பட்டது. இந்தியா அவர்களுடன் ஊடாட்டங்களைச் செய்து தேர்தலில் தலையிடப்போவதில்லை என்று உறுதியளித்தது.

கோதாபய ராஜபக்சவுடன் பணியாற்றுவதைத் தவிர இந்தியாவுக்கு வேறு தெரிவு இல்லை.அதன் காரணத்தினால்தான் விவேகமான ஒரு நடவடிக்கையாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதியைச் சந்தித்தார். இம்மாத இறுதியில் கோதாபய புதுடில்லிக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தியா இரு விவகாரங்கள் தொடர்பில் தெளிவான எல்லைக்கோட்டைக் கீறிவிடவேண்டும். முதலாவது சீனா சம்பந்தப்பட்ட விவகாரம்.சுயாதிபத்தியம் கொண்ட ஒரு அரசு என்ற வகையில் பெய்ஜிங்குடன் பணியாற்றுவதற்கு கொழும்புக்கு சுதந்திரம் இருக்கிறது.ஆனால், சீனாவுடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், தனது செல்வாக்கைப் பிரயோகிக்கவேண்டிவரும் என்பதை புதுடில்லி இலங்கைக்கு தெளிவுபுத்திவிட வேண்டும்.

 இரண்டாவது விவகாரம் தமிழர்களின் பிரச்சினை.  தமிழர்களின் கிளர்ச்சி மீண்டும் மூளக்கூடியதாக இலங்கையை இரு பிரத்தியேகமான இனத்துவ அரசாக மாற்றிவிடக்கூடாது என்று ராஜபக்சாக்களுக்கு சொல்லப்படவேண்டும்.அவ்வாறான நிலைமை தோன்றினால், அது இரு நாடுகளுக்குமே பாதகமாயமையும்.நேபாளத்தில் இழைத்த தவறில் இருந்து இந்தியா படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அந்நாட்டில் கே.பி.ஒலியின் தீவிர தேசியவாத -- பெரும்பான்மையினவாத அரசாங்கத்தை அனுசரித்துப்போகும் முயற்சியில் இந்தியா சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஏற்பாடுகளுடனான அரசியலமைப்பொன்றை உருவாக்கும் செயன்முறைகளுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொண்டது.அதன் விளைவாக நேபாளத்தில் தனக்கிருந்த செல்வாக்குசெலுத்தும் தகுதியை இந்திய இழந்தது.சீனா கணிசமான ஊடுருவர்களை செய்தது.கொழும்பில் உள்ள அரசாங்கத்தை டில்லி மதிக்கவேண்டும்.ஆனால், அவசியமான வேளைகளில் உறுதியை வெளிக்காட்டவேண்டும்.