(ஆர்.விதுஷா)
ஜனாதிபதி தேர்தலுக்காக மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்ட தினங்களில் மதுபானவகைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக 21 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நுவரெலியா . கண்டி , குருணாகல், கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சட்டவிரோதமான முறையில் கசிப்பை விற்ற 12 இடங்களும் அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம் மற்றும் உள்நாட்டு மதுபானங்களை வைத்திருந்த 08 இடங்களும் சுற்றிவளைக்கப்பட்ட அதேவேளை சட்டவிரோத சிகரெட்களைவைத்திருப்பவர்களுக்கு எதிரான சுற்று வளைப்புக்களையும் மதுவரித்திணைக்களம் மேற்கொண்டிருந்தது.
மேலும், வரி செலுத்தாது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட 51.000 லீட்டர் மதுபானமும் , 1000 சிகரெட்களும் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் விற்பனையில் ஈடுபட்ட மதுபான நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டதுடன், , அந்த மதுபான நிலையத்திற்கு சீல்வைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக 5 இலட்சம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.