எம்மில் பலருக்கு கோடை காலம், குளிர் காலம், பனிகாலம், மழைக்காலம் என ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறியும் பரிசோதனையை செய்து, அதன் மூலம் ஒவ்வாமையையும் தூண்டும் காரணிகளை தவிர்த்தால் ஆஸ்மா பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம். 

பொதுவாக கோடை காலங்களில் காற்றில் மாசு பறக்கும். அதிலும் குறிப்பாக வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள புறச்சூழலில் தூசுகள் காற்றில் மிதக்கும். இவற்றை சுவாசிக்கும் பொழுது ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பு உருவாகிறது. சிலருக்கு கோடையில் மலரும் மலர்களால் அதன் மகரந்தங்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பு உண்டாகும். சிலருக்கு சில வகையினதான உணவின் காரணமாகவும் ஆஸ்மா பாதிப்பு உண்டாகும். 

வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டால், அவர்கள் Skin Prick Test  மற்றும் Intradermal Test என்ற இரண்டு வகையினதான பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இவ்விரண்டு பரிசோதனைகளின் முடிவில் உங்களுக்கு ஒவ்வாமையை தூண்டக்கூடிய காரணிகளைப் பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மா பாதிப்பிலிருந்து விடுபட இயலும்.