(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் பாதிக்கும் என்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

பாராளுமன்ற கலைப்பிற்கு அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. உரிய காலத்தில் புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தால் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். அது வரையில் பாராளுமன்றம் செயற்படுவதற்கான மக்கள் ஆணை இருக்கிறது. 

அமைச்சரவை தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும். தனித்தனியாக அமைச்சர்கள்; பதவி துறப்பது தவறான முன்மாதிரியாகும். எனவே பிரதமர் கட்சி தலைவர்களையும் அமைச்சர்களையும் அழைத்து பேச வேண்டும். அதிகாரம் தொடர்பில் சட்ட பூர்வமான சாதக நிலைமை எம் பக்கம் இருந்தாலும் புதிய ஜனாதிபதியின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எமக்கு முழு சம்மதம். 

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வாழ்த்து தெரிவிக்கிறது. புதிய ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து கொண்ட போது சிங்கள வாக்குகளால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டதாகவும், தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்த ஆதரவு வழங்கவில்லை என்று கூறியதை கவனத்தில் கொள்கின்றோம். நாம் அந்த வாக்குகளைப் பெற்றுத்தரவில்லை என்று அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார். எனினும் அனைத்து மக்களுக்கு ஜனாதிபதியாக அவர் செயற்படப் போவதாக கூறியிருக்கின்றமை வரவேற்கதக்கது. 

எனவே அவர் முழு இலங்கைக்குமான தலைவராக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம். தேர்தலுக்கு பின்னர் சில இடங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என்பதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.