தமிழகத்தின் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (18ம் திகதி), ‘மக்கள் குறைதீர் கூட்டம்’ நடைபெற்றது. இதில், ஆட்சியர் கதிரவன் தலைமையில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தனர்.

மதிய உணவு நேரம் நெருங்கவே, ஆட்சியர் கதிரவன் உணவருந்துவதற்காக காரில் ஏறி தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, கையில் ஒரு சிறிய கூடையுடன் வேகமாக வந்த ஒருவர், ஆட்சியர் காரை தடுத்து நிறுத்தினார்.

கையில் இருந்த கூடையைத் திறந்து ஆட்சியருக்கு காட்டியபடியே “ஐயா, நேற்று இரவு வீட்டுக்கு வெளியே வந்தபோது இந்த முள்ளெலி வீட்டுக்கு முன் இருந்தது. இது அழிந்து வரும் இனம் என்பதால் அதை பிடித்து பத்திரமாக கூடையில் போட்டு வைத்தேன்.

இதை எங்கே ஒப்படைப்பது என்று எனக்கு தெரியவில்லை. அதனால்தான் இங்கே கொண்டுவந்தேன். நீங்கள்தான் இந்த முள்ளெலியைக் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி, அந்த முள்ளெலியை ஆட்சியரிடம் நீட்டினார்.

உடனே, அருகில் இருந்த வனத்துறை அதிகாரிகளை அழைத்த ஆட்சியர், “இந்த எலியை வாங்கி பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் விடுங்க” என்றார். இதையடுத்து, அந்த நபரிடமிருந்த முள்ளெலியை வனத்துறையினர் பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து அவர் கூறியதாவது; “என் பெயல் பழனிச்சாமி. நான் ஒரு சமூக ஆர்வலர். சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கொடுமுடி தாலுகா அண்ணா நகரில் இருந்து வருகிறேன். 

முள்ளெலி அழிந்து வரும் இனம் என்று பத்திரிகைகளில் படித்துள்ளேன். முன்பு ஒருமுறை, இதேபோல் ஒருவர் முள்ளெலி ஒன்றை கொண்டுவந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். 

வழிதவறி வந்த வாயில்லா ஜீவனை காப்பாற்றுவதாக நினைத்து, தவறான ஆட்களிடம் அதை ஒப்படைத்துவிடக்  கூடாதல்லவா..? ஆட்சியரிடம் ஒப்படைத்தால் கண்டிப்பாக அது காப்பாற்றப்படும் என்றுதான் கூடையில் போட்டு அதை இங்கு கொண்டு வந்தேன்” என்றார்.