(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறுபான்மை மக்கள் இனரீதியாக சிந்தித்து வாக்களிக்கவில்லை. அவர்கள் கொள்கைக்கு முக்கியத்துவமளித்து தமது வாக்குகளை பிரயோகித்தனர் என்பதை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு தொகுதி பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் இனவாத ரீதியிலான போலிப்பிரசாரங்களை முறியடிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்களத் தலைவர்கள் முயற்சிக்காததாலே தேர்தலில்  தோல்வியை சந்திக்க நேரிட்டது எனவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களும் முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளருக்கோ தமிழ் வேட்பாளருக்கோ வாக்களிக்கவில்லை. மாறாக ஒரு சிங்கள தலைவருக்கே வாக்களித்துள்ளனர். அவர்கள் பெரும்பான்மையினருடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். இந்த ஜனாதிபதித் தேர்தலில் இதனை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். 

வடக்கு கிழக்கு உள்ளிட்ட சிறுபான்மையினர் சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாசவுக்கே பெருமளவில் வாக்களித்திருக்கின்றனர். இதனை சிலர் இன ரீதியில் வாக்குகள் பிரிந்திருப்பதாக குறிப்பிடுகின்றனர். 

எனினும், அது தர்க்க ரீதியில் முரண்படுகின்றது. அவர்கள் வாக்களித்தது ஒரு பௌத்தருக்கு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.