(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து, மலையகத்தின்  தமிழர் பகுதிகளில், தேர்தலை மையப்படுத்திய பல தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

எனினும் அவ்வாறு பதிவானதாக கூறப்படும் சம்பவங்கள் தேர்தலுடன் தொடர்பு அற்றவை எனவும் அவை தனிப்பட்ட சம்பவங்கள் எனவும், தாக்குதலுக்கு உள்ளானோர் அதனை தேர்தல் சம்பவமாக காட்ட முற்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று இரவு , யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில்  தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் வீடுகளுக்குள் ஒரு குழுவினர் ஊடுறுவி தாக்குதல் நடத்தி, வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், வீட்டில் பெண்கள், யுவதிகளிடம் தவறாக நடக்க முற்பட்டதாகவும்  அப்பகுதி மக்கள்  தெரிவித்தனர்.

இவ்வாறு வீடு புகுந்தவர்கள் ' யாருக்கு வாக்களித்தீர்கள் எனக் கோரியவாறே இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்டதாக கனேபல்ல தோட்ட மக்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை கண்டி -  ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனிஸ்கல தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக் கொண்டாடத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர், சில தமிழ் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். இதில் காயமடைந்த இளைஞர் ஒருவர் மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், பொலிஸார் சார்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர அவை குறித்து விளக்கமளித்தார்.

' யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவில் கனேபல்ல தோட்டத்தில்  மது போதையில் இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் தாக்குதலாக மாறியதாகவும் அந்த தாக்குதல் தொடர்பிலும் 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய யட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 உண்மையில் சமூக வலைத் தளங்களில் இந்த சம்பவம் தொடர்பில் பரவும் காணொளியில் உள்ளதைப் போன்று இந்த சம்பவம் தேர்தலுடன் தொடர்புபட்டது அல்ல. முற்றிலும்  மதுபோதையில் இருந்த இருவருக்கு இடையே இடம்பெற்ற தனிப்பட்ட தாக்குதல் சம்பவம்.

யாரும் வீணாக அச்சமடைய தேவை இல்லை. இந்த தனிப்பட்ட சம்பவங்களை தேர்தலுடன் தொடர்புடையதாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காட்ட முற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. இவ்வாறான பல தனிப்பட்ட சிறு தாக்குதல்கள் பதிவகியுள்ளன. அவை எவையும் தேர்தலுடன் தொடர்பானவை அல்ல என்றும் கூறினார்.