லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா, பொலிவூட் நடிகர்கள் பிரதீக் பாப்பர், சுனில் ஷெட்டி, தலிப் தாஹில் ஆகியோருடன் நடிகை நிவேதா தோமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். பேட்ட படத்தைத் தொடர்ந்து அனிரூத் இசையமைக்கும் இரண்டாவது ரஜினியின் படமிது. இப்படத்தின் டப்பிங்கை அண்மையில் நிறைவு செய்த சுப்பர் ஸ்டார், அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் இயக்குநர் சிவாவுடன் பங்குபற்றி வருகிறார்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காக்கி சட்டை அணிந்து துடிப்புள்ள பொலிஸ் அதிகாரியாக சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பினையே அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.