தெஹ்ரானில் ஏற்பட்ட அமைதியின்மையினால் ஈரானிய பாதுகாப்பு படையின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் ஐ.எஸ்.என்.ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் ஈரானில், கடந்த வெள்ளிக்கிழமை பெற்ரோல் விலை 50 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது. 

ஒரு மாதத்தில் முதல் 60 லிட்டா் பெட்ரோலுக்கு 10,000 ஈரான் ரியால் என்று இருந்த விலை, தற்போது 15,000 ரியாலாக உயா்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் 60 லிட்டருக்கு மேல் கூடுதலாக கொள்வனவு செய்வோருக்கு 30,000 ரியாலாக விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 87,000 க்கும் மேற்பட்டோர் போராட்டங்களை மேற்கொண்டு வருவதுடன், ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்காரணமாக இதுவரை 36 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.