கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி இந்த நாட்டில் வடக்கு மற்று கிழக்குக்கும் தெற்கும் இடையில்இருக்கும் பாரிய இடைவெளியினை குறைப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன் என ஜனநாயக மக்கள்முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது.. 

தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்று கூறுவார்கள். அந்த அடிப்படையில் பெருபான்மை மக்களின்ஆணித்தரமான ஆணையினைப் பெற்ற ஜனாதிபதிக்கு வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்கும் தெற்கில் வாழும் பெரும்பான்மை மக்களுக்குமான இடைவெளியினை குறைத்து தன்னுடைய வரலாற்றுச் சாதனையாகச் செயற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். போர் முடிவுக்கு கொண்டுவந்த பிறகும்கூட இந்த இடைவெளியினை அன்றைய அரசு காலத்தில் நிரப்ப முடியவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது. 

இன்று வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்கு வழங்கி இல்லாது போனது அந்த மக்கள் போர் முடிந்த பிறகு இருந்த சூழ்நிலையினால் ஏற்பட்ட அவநம்பிக்கையை மட்டுமே காட்டுகிறது.

ஆகவே ஒரு நாட்டின் தலைவராக இந்த மக்களின் அவநம்பிக்கையினை இல்லாமல் செய்வதற்கு பெருபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவும் உதவும் என்று நம்புகிறோம். 

இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் தலைமைகளின் கோரிக்கைகளுக்கு உட்படாமல் தமது சொந்த முடிவில் தங்கள் அவநம்பிக்கையின் வெளிப்பாட்டையே வாக்குகளாக வழங்கிஉள்ளார்கள் என்பதை ஆட்சி அமைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

அதேவேளை மீண்டும் தமிழ் பேசும்மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைமைகளை புதிய அரசின் பக்கம் முழுமையாக உள்வாங்கப்பட்டால் மக்களின் அவநம்பிக்கை தொடரும் என்பதையும் அதனால் நாம் இலங்கையர் என்ற எண்ணம் தமிழ் பேசும்மக்கள் மத்தியில் உருவாவது மந்தம் அடையும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இதே சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்தளத்தினூடாக இந்த புதிய ஜனாதிபதி மீதோ அல்லது அமையப்போகும் அரசாங்கத்தின் மீதோ வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அச்சமோ அவநம்பிக்கையோ அடைய வேண்டிய அவசியமில்லை எனக்குறிப்பிட்டதை வரவேற்க வேண்டும். இளைய தலைமுறை இரண்டு பக்கத்திலும் முற்போக்குடன் சிந்திப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. 

மேலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையினை இந்த தேர்தலில் வலிமையாகக்காட்டியுள்ளார்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய வெற்றியாகப் பார்க்குமானால் அதற்கானபதிலையும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என்று அவர்குறிப்பிட்டார்.