ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ம் திகதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி நிறைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆண்களுக்கு அவ்வளவு கவனம் அளிக்கப்படுவதில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். 

ஒரு பெண் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூகம் ஒரு பார்வையை வைத்திருக்கிறதோ, அதைப் போலவே ஆண் மீதும் எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது. கட்டுப்பாடுகள் என்பது இங்கு பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் இருக்கிறது.

ஓர் ஆண் மனிதனாக இருக்க வேண்டும் என்பதை விட ஆணாக இருக்க வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப்படுகிறார்கள்.

ஆண்கள் மீது இந்த சமூகம் வைத்துள்ள அடிப்படைப் பார்வை இன்னும் மாறவில்லை. ஒரு ஆண் என்பவன், பாதுகாவலனாக இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிப்பது அவர்கள் பொறுப்பு. இரண்டாவது. ஆண் வலிமையானவனாக இருக்க வேண்டும்.

மூன்றாவது பணம். "பெண்கள் என்றால் அழகாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் பணம் சம்பாதிக்க வேண்டும்." இதுவும் இந்த சமூகத்தின் அபத்தமான பார்வைகளில் ஒன்று.

இது ஆணாதிக்க சமூகம் என்பதால் பெண்களின் பிரச்சனை பெரிதாக பேசி முன்னெடுக்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஆண்களின் பிரச்சனையை அவர்களே பல நேரங்களில் பேசுவதில்லை.

ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் இங்கு அதிகம்தான். அதே நேரத்தில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கின்றன.

ஆனால், அதனை வெளிப்படுத்தினால், எங்கு தான் வலிமையற்றவனாக தெரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் பலரும் இங்கு வெளியே சொல்ல தயங்குகிறார்கள். பெண்கள் பாலியல் புகார் அளிப்பது பெரிதாக பேசப்படுவது அல்லது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுபோல, ஆண்களின் புகார்கள் இங்கு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக ஒரு ஆண் கூறினால், "நீ ஆண் தானே. உன்னால் தடுக்க முடியவில்லையா " என்று கேட்டு அவர்கள் மீதே குற்றம் சுமத்துகிறோம். 

சட்டம் பெண்களை அதிகம் பாதுகாக்கிறதா?

பெண்களுக்கு இருக்கும் அதே ஆசையும், காதலும், பொறுப்பும் ஆண்களுக்கும் இருக்கிறது. ஆனால், Child Custody வழக்குகளை எடுத்துக் கொண்டால், குழந்தைகள் பெண்களுடனே அனுப்பப்படுகிறார்கள்.

பெண்களால் மட்டுமே குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. குழந்தை வளர்க்கும் பொறுப்பு ஆண் பெண் இருவருக்குமானது என்பதை ஏற்றுக் கொள்ள இன்னும் இந்த சமூகம் தயாராக இல்லை. சில நேரங்களில், ஆண்களிடம் இருந்து குழந்தையை வளர்ப்பதற்கான பணம் வாங்கப்படுகிறது.

"ஒரு காலத்தில் ஆண்கள் பக்கம்தான் சட்டம் இருந்தது. தற்போது அது மாறியுள்ளது என்று கூறலாம். அந்த காலத்தில் ஆண்களிடம் பணம் இருந்தது. தற்போது, பெண்களும் சமமாக சம்பாதிக்கிறார்கள். எனினும், ஆணை விட பெண்களால், குழந்தைகளுக்கு எமோஷனல் சப்போர்ட்டாக இருக்க முடியும் என்பதினால், அவர்களுடன் குழந்தைகள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தாம்பத்தியம்

ஒரு தாம்பத்திய உறவை எடுத்துக் கொண்டால் கூட, ஒரு பெண்ணால் ஒத்துழைக்க முடியவில்லை என்றால் அவள் அச்சப்படுகிறாள் என்று கூறுவார்கள். அதனை ஏற்றுக் கொள்வதில் இங்கு யாருக்கும் பிரச்சனை இருந்ததில்லை. அதே நேரத்தில் ஒரு ஆணால் ஒத்துழைக்க முடியவில்லை என்றால், அவருக்கும் பதற்றம் அல்லது பயம் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது ஆண்மை சம்மந்தப்பட்ட விஷயமாக்கப்படுகிறது.

அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள்

பெண்களுக்கு அதிகளவு மன அழுத்தம் (Depression) இருந்தாலும், ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கஜறார்கள்.

"அவர்களது உணர்ச்சியை வெளிப்படுத்த நாம் விடுவதில்லை. இதே நேரத்தில் பெண்கள், மற்றவர்களிடம் புலம்பி அதனை வெளிப்படுத்திக் கொள்வார்கள்."

உலக அளவில் ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்வதாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

"ஆண்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால் அதை அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் அவருக்கு, ஒரு பெண்ணின் பிரச்சைனையையும் தீர்க்கும் வல்லமை இருப்பதாக நம்பப்படுகிறது. ஆண்கள், தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாதவர்காளாக நிற்கின்றனர். அழுகை என்பது பெண்மையின் வெளிப்பாடாக பார்க்கப்படுவதால், ஒரு ஆண் அழுவது அவர்களின் ஆண்மைக்கு இழுக்காக பார்க்கப்படுகிறது.

ஆண்களுக்கும் பதற்றம், கவலை எல்லாமே உண்டு. உணர்ச்சிகள் என்பது மனித இயல்பு. உணர்ச்சிகள் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஆணின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, அதனையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

தான் பதற்றப்படக்கூடாது, கவலைப்படக்கூடாது, மனம் விட்டுப் புலம்பக்கூடாது, கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடாது, எல்லா இடங்களிலும் தானே எல்லாவற்றையும் முன் நின்று செய்ய வேண்டும். 

குடும்ப அமைப்பு

"குடும்ப அமைப்பும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஒரு குடும்பத்தில் நான்கு பெண்கள், ஒரு ஆண் இருந்தால் அந்த ஆணுக்கு அதிக பொறுப்புகள் கொடுக்கப்படும். ஆனால், அந்த வீட்டில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கலாம். அது மட்டுமல்லாமல், அந்த ஆணிடம் பெண்மை அதிகமாக இருக்கும். நாளை அவருக்கு திருமணம் நடைபெறும்போது, அதில் பிரச்சனை வந்து மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆண்கள் மீதான சமூகத்தின் எதிர்பார்ப்புகள்

தற்போது, ஆண்களும் சம்பாதிக்கிறார்கள் பெண்களும் சம்பாதிக்கிறார்கள் என்று கூறுகிறாம். இருவரும் வேலை செய்கிறார்கள். இருவருக்கும் பொறுப்பு உண்டு. ஆனால், இன்றும் திருமணத்திற்கு மாப்பிளை தேடும்போது, பெண்ணை விட ஆண் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்த பெண்ணுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கிறது. எதிர்பார்ப்புகள் ஆண்கள் மீது திணிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் மீது இந்த சமூகம் வைக்கும் எதிர்பார்ப்புகள் தரும் அழுத்தத்தை எல்லா ஆண்களாலும் சமாளிக்க முடியாது."

குழந்தை வளர்ப்பு

எந்த கஷ்டம் வந்தாலும் ஆண்கள் அழக்கூடாது என்ற விஷயத்தை நாம் மாற்ற வேண்டும். ஆண்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை இந்த சமூகம், ஏற்றுக் கொள்ள வேண்டும். இதெல்லாம் மாற இன்னும் அதிக காலம் எடுக்கும். 

"சமூகத்தில் ஒருவரை ஒருவர் சமமாக ஏற்றுக் கொண்டால், நீ அழுதால், நானும் அழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தையை வளர்க்கும்போது ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி வளர்க்க வேண்டும். இது வாய் வார்த்தையாக மட்டும் அல்லாமல், ஆணும் பெண்ணும் சமம் என்பது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு முதல் சமுதாயமே குடும்பம்தான். அங்கு ஆணும் பெண்ணும் சமம் என்று நிரூபித்தால், வருங்காலத்தில் ஆண்கள் தினம், பெண்கள் தினம் என்று இல்லாமல் மனிதர்கள் தினம் என்ற ஒன்றை நாம் கொண்டாடலாம்.