பாகிஸ்தானின் கிழக்கு பிராந்தியத்தில் 40 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  8 பேரின் சடலங்களை மீட்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஒகாரா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 40 பயணிகளுடன் சட்லெஜ் என்ற ஆற்றில் பயணித்த படகு திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, தண்ணீரில் மூழ்கியது.

குறித்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு படையினர் சடலங்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உள்ளூர் மக்களின் உதவியுடன் குறித்த மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.