(நெவில் அன்தனி)

கௌரவ அமைச்சர் என்ற பதவியானது கௌரவ சேவை புரிவதாகும். கௌரவ என்ற சொற்பதத்தை பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டு சம்பளம் பெறுவது சரியல்ல. இந்த சொற்பதத்துடன் சம்பளம் பெறுவது, கார்கள் பெறுவது, அரசிடமிருந்து வசதிகளை பெறுவது பொருத்தமல்ல. இவை எதனையும் எதிர்பார்க்காமல் சேவையாற்றுவதே கௌரவ என்ற சொற்பதத்துக்கு உண்மையான அர்த்தமாகும். இதனை நான் இதற்கு முன்னரும் பல தடவைகள் கூறிவந்துள்ளேன். எனவே தற்போதைய அரசியல் கலாசாரத்தில் மாற்றம் அவசியம் என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளiயாட்டுத்துறை ஆகிய அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்துள்ள ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, மக்களின் ஆணையை மதித்து அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் கூறினார். 

'அரசியலில் எதுவும் நிலையானதல்ல. விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மிகக் குறுகிய காலத்தில் விளையாட்டுத்துறையில் ஊழல் மோசடிகளை, சூதாட்டத்தை முற்றாக ஒழிப்பதற்கு விளையாட்டுத்துறை சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையிட்டு முழு திருப்தி அடைகின்றேன். இந்த சட்டத்தை தயாரிப்பதற்கு உவிய விளையாட்டுத்துறை அமைச்சு ஆலோசகர் சட்டத்தரணி பண்டுக்க கீர்த்தினந்தவுக்கு நன்றி கூறுகின்றேன். இனிமேலும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை நாசம் செய்யவோ, விளையாட்டுத்துறையில் களவாடவோ முடியாது.

'இலங்கை வறிய நாடு. வீர, வீராங்கனைகள் மத்தியில் திறமை இருக்கின்றது. அவர்களுக்கு வசதி, வாய்ப்புகள் செய்துகொடுக்கப்படவேண்டும். தேசிய வீரர்களுக்கு அரசாங்கத்தில் தொழில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆவலாக இருந்தேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவந்தேன். இனி பதவிகளுக்கு வருபவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.