இன்றைய திகதியில் பிறக்கும் இரண்டாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவி குறைபாடு ஏற்படுகிறது. தற்பொழுது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மருத்துவ கண்டுபிடிப்புகளால் பிறவிக் குறைபாடுகளுக்குரிய சிகிச்சைகளும் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.

பிறக்கும் போதே கண், இதயம், கால் உள்ளிட்ட பல்வேறு உடலுறுப்புகளின் குறைபாடுகளுடன் குழந்தை பிறந்தால், அந்த குழந்தையை பிறவி குறைபாடுடைய குழந்தை என்று மருத்துவர்களால் வரையறுக்கப்படுகிறது. இத்தகைய நிலை ஏற்படுவதற்கு, பேறு காலத்தின் போது பெண்கள் போதிய அளவிற்கு ஊட்டசத்துள்ள உணவினை சாப்பிடாதது ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் உறவு முறையிலான திருமணங்களும் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்றில் இருக்கும் சிசுவின் வளர்ச்சி குறிப்பாக முதுகெலும்பின் வளர்ச்சி முழுமை அடையாமல் இருந்தாலும் கூட பிறவிக் குறைபாடு ஏற்படக்கூடும். இதற்கு மருத்துவ துறையில் மெனிங்கோமைலோசில் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகளால், முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் உள்ள எலும்புகள் முழுமையான வளர்ச்சியை பெறாமல் இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது.

பேறுகாலத்தின் போது அல்ட்ராசவுண்ட் எனப்படும் ஸ்கேன் பரிசோதனையின் போதும், பேறு காலத்தின் போது பெண்களின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அம்னியோடிக் என்ற பிரத்யேக திரவத்தை பரிசோதனை செய்தும் பிறவி குறைபாட்டை முன்னரே கண்டறிய முடியும் அல்லது உறுதி படுத்த இயலும். பிறவி குறைபாடு ஏற்பட்டிருந்தால் அதற்கு தற்போது ஃபெடோஸ்கோப்பி நவீன சத்திரசிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. சிலருக்கு இத்தகைய சத்திர சிகிச்சை தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போதும் மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் ஏற்படும் குறைபாடுகளையும் பிறவி குறைபாடுகளாக கருதி அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து, பிரத்தியேக சத்திர சிகிச்சை செய்வதன் மூலம் அதிலிருந்து அவர்களை குணப்படுத்த இயலும் அல்லது முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

பிறவி குறைபாட்டுக்கு பேறுகாலத்தின் போது தாய்மார்கள் உட்கொள்ளும் உணவு முறையும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பெண்கள் தங்களுடைய பிரசவ காலங்களில் மகப்பேறு மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரைக்கும் உணவு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பிறவி குறைபாட்டை களைவதற்கான பிரத்யேக சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

டொக்டர் அரவிந்த் பாபு

தொகுப்பு அனுஷா.