(நா.தனுஜா)

புதிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். பழைய லிபரல்வாதக் கொள்கைகளை உடைய ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்குவதைவிட , நடைமுறைக்கு ஏற்றவாறான, நவீன கொள்கைகளுடனான ஊழலற்ற இளைய தலைமுறைக்கு வழிவிடுவதே சிறந்தாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்திருக்கிறார்.

சம்பிக்க ரணவக்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டுள்ள காணொளி ஒன்றின் ஊடாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தற்போது ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ, கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட கடன்பொறியையும், மேற்குலக நாடுகளுக்க எதிராக அவர்கள் உருவாக்கிய தோற்றப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமன்றி தமிழ், முஸ்லிம் மக்களை ஒதுக்குதல் மற்றும் அவர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றினால் எதிர்காலத்தில் ஏற்படத்தக்க சவால்களும் கோத்தபாய ராஜபக்ஷவின் முன் உள்ளது. 

ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்த சிலராலேயே நாடு இவ்வாறு பிளவுபடுத்தப்பட்டிருக்கிறது. பௌத்தர்களைப் பொறுத்தவரை பயனுடைய, அறிவுபூர்வமான ஒரு கொள்கைத்திட்டத்தை வகுத்து, அதனை நோக்கிப் பயணிப்பதை விடுத்து வெறுமனே பிறரை தகாத வார்த்தைகளால் தூஷிப்பதை மாத்திரம் தொடர்ந்து முன்னெடுப்பது கவலைக்குரியதாகும். 

இப்போது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோத்தபாய ராஜபக்ஷ தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இன்னும் சில காலத்தில் அவர்களுக்குப் பாரிய சவாலாக மாறப்போகின்றது.

எனவே தற்போது புதிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். பழைய லிபரல்வாதக் கொள்கைகளை உடைய ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்குவதைவிட, நடைமுறைக்கு ஏற்றவாறான, நவீன கொள்கைகளுடன் ஊழலற்ற இளைய தலைமுறைக்கு வழிவிடுவதே சிறந்தாகும். 

அதனூடாக இம்முறை எமக்கு வாக்களித்துள்ள மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், திடீர் அச்சத்திலும் வேகத்திலும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தவர்கள் இன்னும் சில காலத்தில் அவர்களின் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் போது அவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதுமே எமது தற்போதைய செயற்பாடாக இருக்கவேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.