தமிழகத்தில், ஐந்து தலைமுறை கண்ட மூதாட்டி ஒருவர், 98 வயது தங்கை, கொள்ளு பேரன், பேத்திகளுடன் தனது 104வது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் புதுவள்ளியாம்பாளையம் காந்தி வீதியைச் சேர்ந்தவர் பெரமாயாள் (104). இவருடைய கணவர் உத்தினகவுண்டர். இவர், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இந்த தம்பதிக்கு, மூன்று மகன்கள், நான்கு மகள்கள். இதில், ஒரு மகன், இரண்டு மகள்கள் இறந்து விட்டனர். இரண்டு மகன்கள் உள்ளூரிலும், மகள்கள் கவுந்தப்பாடியிலும் வசிக்கின்றனர்.

கடந்த 1915ம் ஆண்டு பிறந்த பெரமாயாளுக்கு, நேற்று (17ம் தேதி) 104 வயது பிறந்தது. இதையடுத்து அவருடைய பிறந்த நாளை கொண்டாட, இரு மகன்கள், இரு மகள்கள், ஏழு பேரன்கள், ஆறு பேத்திகள், ஏழு கொள்ளு பேரன்கள், 11 கொள்ளு பேத்திகள் வீட்டில் குவிந்தனர்.

அதே பகுதியில் வசிக்கும் பெரமாயாளின் தங்கை மாராயாள் (98), தன் மூன்று மகள், அவர்களின் வாரிசுகளுடன் வந்திருந்தார். தங்கை மாராயாளுடன் சேர்ந்து 5 கிலோ கேக் வெட்டி தனது 104வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்.

இது குறித்து பெரமாயாளின் வாரிசுகள் கூறியதாவது; “பாட்டி பெரமாயாள் வழியில் இது ஐந்தாவது தலைமுறை. பாட்டியின் 100வது  வயதில் இருந்தே பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம்.

வேலை நிமித்தமாக நாங்கள் பல்வேறு இடங்களில் வசித்தாலும், முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்று கூடுவோம். அதன்படி, பாட்டி பிறந்தநாளை கொண்டாட இங்கு வந்துள்ளோம்” என்றனர்.