பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப் பெற்றுள்ளது. 

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. 

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 150 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

பங்களாதேஷ் அணியில் முஸ்பிகுர் ரஹிம் 43 ஓட்டங்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், அஸ்வின், இஷாந்த் சர்மா தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் 243 ஓட்டங்களை குவித்தார். ரஹானே 86, ஜடேஜா 60, புஜாரா 54 ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். பங்களாதேஷ் அணியில் அபு ஜெயத் 4 விக்கெட்களை சாய்த்தார். 

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி மூன்றாம் நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 

இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கம் முதலே பங்களாதேஷ் அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. முஸ்பிகுர் ரஹிம்(64), மெஹதி ஹசன்(38) மற்றும் லிட்டன் தாஸ்(35) ஆகியோர் மட்டும் ஒரளவு தாக்கு பிடித்தனர். 

இறுதியில் பங்களாதேஷ் அணி 69.2 ஓவர்களில் 213 ஓட்டங்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. 

அத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய மொஹமட் ஷமி 4 விக்கெட்களை சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் எடுத்தனர். 

இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.