(நா.தனுஜா)

நாட்டின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பதுடன், பிராந்தியத்தின் சுபீட்சத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

நாட்டின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்து, ஏழாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் குறித்த டுவிட்டர் பதிவில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோதத்தாபய ராஜபக்ஷவிற்கு எனது வாழ்த்துக்கள். எமது இரு நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் இடையில் காணப்படும் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உங்களுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன். அத்தோடு எமது பிராந்தியத்தின் அமைதி, சுபீட்சம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றவுள்ளோம்.

அதேபோன்று சீரான தேர்தலொன்றை வெற்றிகரமான நடத்தி முடித்திருப்பதையிட்டு இலங்கை மக்களனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.