(நா.தனுஜா)

மக்களுடைய வாக்குரிமை என்பது அவர்களுடைய உரிமையாகும். அது நாட்டுமக்களின் பலம் என்பதுடன், அனைவரினதும் எதிர்காலத்தையும் அதுவே தீர்மானிக்கும். அந்தவகையில் நாட்டுமக்கள் பலரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதன் ஊடாக தமது ஜனநாயகக் கடமையை ஆற்றமுன்வந்திருப்பது பெருமையளிக்கிறது என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகின்ற நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஆசியாவின் மிகப்பழமையான ஜனநாயக நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான ஜனநாயகக் கடமையில் நாட்டுமக்கள் அனைவருடனும் இணைந்து ஈடுபட்டிருக்கிறேன். மக்களுடைய வாக்கு என்பது அவர்களுடைய உரிமையாகும். அது நாட்டுமக்களின் பலம் எனும் அதேவேளை, அதுவே அனைவரினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

நாமனைவரும் ஒரு ஜனநாயக சூழலிலேயே வாழ்ந்திருக்கின்றோம். அண்மைய தசாப்தங்களில் அந்த ஜனநாயகத்தைப் பாதுகாத்தும், உறுதிப்படுத்தியுமிருக்கிறோம். அந்தவகையில் நாட்டுமக்கள் பலரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதன் ஊடாக தமது ஜனநாயகக் கடமையை ஆற்றுவது பெருமையளிக்கிறது.