ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்று வருவததாகவும், வாக்களிப்பு உகந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் கஃபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இன்று நண்பகல் வரை 40 சதவீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் நண்பகல் வரை கஃபே அமைப்பிற்கு 54 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, குருநாகல் டிப்போவிற்குச் சொந்தமான டபிள்யு.பி.என்.ஏ. 4972 என்ற இலக்கம் கொண்ட பேருந்து மீது இன்று அதிகாலை தந்திரிமலை பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வாக்களிக்கச் செல்ல அஞ்சியதாக தகவல் கிடைக்கப்பெற்றது. அத்தோடு, மரங்களை வெட்டி வீதியில் இட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, தெரணியகல பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களுக்கும், பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றிற்கு மேலதிகமாக, சட்டவிரோத பிரசாரம், கட்சி சின்னம் அடங்கிய சிறிய அட்டைகளை வீதிகளில் வீசிச்சென்றமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. எனினும், பாரதூரமான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை.

கஃபே அமைப்பின் 2200 கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.