2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்  ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 

இன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில்  12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சகல விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பொதுமக்களுக்காக செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் இவற்றில் 9 இலட்சத்து 49ஆயிரத்து 606 பேர் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான  ஜனாதிபதி தேர்தல் இன்று நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறுகின்ற நிலையில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள சகல மக்களும் தமக்கான வாக்குகளை பதிவதற்கான சகல ஏற்பாடுகளும் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். 

இதுவரை காலமாக தேர்தல் நாட்களில் காலை 7 மணி தொடக்கம்  பிற்பகல் 4மணி வரையும் வாக்களிக்க முடியும் என நேர ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை மேலதிகமாக ஒரு மணிநேரம் அதிகமாக நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய வாக்காளர்கள் பிற்பகல் 5 மணி வரையில் வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

அத்துடன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக நாடளாவிய ரீதியில்   12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  அதேபோல் 1550 வாக்கெண்ணும் நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் 48 ஆயிரம் பேர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு கடமைகளில் 2 இலட்சம் அரச அதிகாரிகளும் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து  96 பேர் (15,994,096) ஆகும். 

இவர்களின் எண்ணிக்கை  22 தேர்தல் மாவட்ட அடிப்படையில்  கொழும்பு மாவட்டத்தில்- 1,670,403 வாக்காளர்களும்,  கம்பஹா மாவட்டத்தில் - 1,751,892 வாக்காளர்களும் , களுத்துறை மாவட்டத்தில்- 955,079 வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில்  - 1,111,860 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில்- 401,496 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் - 569,028 வாக்காளர்களும், காலி மாவட்டத்தில்  - 858,749 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் - 652,417 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் - 485,786 வாக்காளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 564,714 வாக்காளர்களும், வன்னி மாவட்டத்தில் - 282,119 வாக்காளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் - 398,301 வாக்காளர்களும், திகாமடுல்லை மாவட்டத்தில் - 503,790 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் - 281,114 வாக்காளர்களும், குருநாகல் மாவட்டத்தில் - 1,331,705 வாக்காளர்களும், புத்தளம் மாவட்டத்தில் - 599,042 வாக்காளர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் - 682, 450  வாக்காளர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் - 326,443 வாக்காளர்களும், பதுளை மாவட்டத்தில் - 657,766 வாக்காளர்களும், மொனராகலை மாவட்டத்தில் - 366,524 வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் - 864,978 வாக்காளர்களும், கேகாலை மாவட்டத்தில் - 676,440 வாக்காளர்களும் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.