தேவையற்ற பிரசாரங்களையும் வதந்திகளையும் நம்பி ஏமாறாது மக்கள் தமக்கான வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு ஜனாதிபதி சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2019 நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் நாடு பூராகவும் உள்ள சகல வாக்காளர்களும் சுதந்திரமாக தமது வாக்கினை பதிவு செய்வதற்கான சூழல் தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  பணிப்புரைக்கமைய பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையினர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், தேவையற்ற பிரசாரங்களையும் வதந்திகளையும் நம்பி ஏமாறாது மக்கள் தமக்கான வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு ஜனாதிபதி சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ள ஒரு நாட்டில் பிரஜைகளின் அதிகாரமாகவும் முதன்மை கடமையாகவும் பொறுப்பாகவும் அமைவது தமது விருப்புக்குரிய ஒருவருக்காக தமது வாக்கினை பதிவு செய்வதே ஆகும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.