(ரொபட் அன்டனி)

நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை நடைபெற வுள்ள தேர்தல் வாக்களிப்பில் மக்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும். மக்கள் எந்தவகையிலும் வாக்களிப்பை  புறக்கணி க்கவோ  பகிஷ்கரிக்கவோ கூடாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின்  உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் நிகாப் அணிந்துகொண்டு செல்லலாம்.  ஆனால் வாக்களிக்கும்போது மட்டும்  ஹிஜாப்பை நீக்கி முகத்தைக் காட்டவேண்டும். இது தொடர்பில் போலியான பிரசாரங்களுக்கு ஏமாறக்கூடாது   என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாளை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பு  தொடர்பில்  கேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் இது  தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிபபில் அனைத்து வாக்காளர்களும்  கட்டாயம் வாக்களிக்கவேண்டும். உங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தவேண்டும். வாக்களிக்காமல் புறக்கணிக்கவோ  பகிஷ்கரிக்கவோ முயற்சிக்கிக்கக்கூடாது.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதில்  வாக்காளர்கள் தமது பங்களிப்பை செலுத்தவேண்டியது அவசியமாகும். அந்த  சந்தர்ப்பத்தை  இழக்கக்கூடாது.

வாக்களிக்கும் முறை குறித்து  மக்கள் தெ ளிவாக இருக்கவேண்டும். விருப்பு வாக்குகள் கட்டாயம் என்றும்  பிரசாரம் செய்யப்படுவதாக தெரிகின்றது.  வாக்காளர்கள் விரும்பின் விருப்பு வாக்கை அளிக்கலாம். அல்லாது ஒருவருக்கு வாக்களித்துவிட்டு வரலாம்.  விருப்பு வாக்கு அளிக்கவேண்டும் எனின்  1, 2 மற்றும்  3 இலக்கங்களை இடலாம்.

மேலும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.  முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் மற்றும் நிகாப் அணிந்துகொண்டு செல்லலாம்.  ஆனால் வாக்களிக்கும்போது மட்டும்  ஹிஜாப்பை நீக்கி முகத்தைக் காட்டவேண்டும்  . இந்த விடயத்தில் குழப்பங்கள் வேண்டாம்.

அதாவது வாக்காளர்களை  வாக்கு சாவடிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக பல உண்மைக்கு புறம்பான  பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு இடமளிக்க்கூடாது. அத்துடன் காலை வேளையிலேயே  சென்று வாக்களித்துவிட்டு வருவது  நன்றாக இருக்கும் என்றார்.