தனது பிறந்தநாள் அன்று 16 வயது மாணவன் ஒருவன் தனது பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு  தனது சக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது.

லொஸ்ஏஞ்சல்சிற்கு வடக்கே உள்ள சன்டா கிளரிட்டாவின் சவுகஸ் உயர் தரப்பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள தனது உயர்தரப்பாடசாலைக்கு சென்ற மாணவன் முதுகுப்பையிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்து 16 செகன்ட்களில் தனது ஐந்து சகமாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் தன்மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டான் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் துப்பாக்கி பிரயோகம் காரணமாக 14 வயது சிறுவனும் 16 வயது மாணவியும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட மாணவனும் உயிருக்காக போராடுகின்றான் என தெரிவித்துள்ள காவல்துறையினர் 46 கலிபர் கைத்துப்பாக்கியையே மாணவன் பயன்படுத்தினான் என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின்  கடந்தகாலங்கள் குறித்து  நாங்கள் ஆராய்ந்துவருகின்றோம் அவரின் சமூக ஊடக பதிவுகளை ஆராய்;ந்து வருகின்றோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை ஆரம்பமான பின்னரே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர், சிலர்வகுப்பறைகளிற்குள் பதுங்கினர் என தெரிவித்துள்ளனர்.

முதலில் ஒரு சத்தமும் பின்னர் தொடர் சத்தங்களும் கேட்டன என மாணவியொருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்வேளைகளில் வகுப்பறைகளில்ஒளிந்து கொள்வதற்கு எங்களிற்கு பயிற்சியளிக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்டதுப்பாக்கி பிரயோகம்அருகில் உள்ள வகுப்பறையில் இடம்பெறுவதாக கருதி நாங்கள் வெளியே ஓடத்தொடங்கினோம் என அந்த மாணவிதெரிவித்துள்ளார்.

வாயில் கதவுகளை நோக்கி ஓடினோம் அது திறந்திருந்தது,நாங்கள் எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஒடினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி எங்கள் சக மாணவர்கள்  பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை கேட்டோம் அவர்கள் தாங்கள் மறைந்திருப்பதாக தெரிவித்தனர் எனவும் அந்த மாணவிதெரிவித்துள்ளார்.

நான் வகுப்பறை மணிஒலிப்பதற்காக காத்திருந்தவேளை துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றன என மற்றொரு மாணவி தெரிவித்துள்ளார்.

முதலில் அனைவரும் பலூன் என நினைத்தோம்,அதன் பின்னர் அமைதி நிலவியது அதனை தொடர்ந்து இரண்டு சத்தங்கள் கேட்டன, அனைவரும் வகுப்பறையிலிருந்து வெளியே ஓடினார்கள்,நான் அங்கிருந்து வீதி;க்கு மிக விரைவாக ஓடினேன் என அந்த மாணவி தெரிவித்துள்ளார்.