மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (15.11.2019) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலக பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதோடு,மாற்றுப்பாதையூடாக போக்குவரத்து இடம் பெற்று வருகின்றது.

நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரச,மற்றும் தனியார் பேரூந்துகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 1365 அரச அலுவலகர்கள்  கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு மன்னார் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 403 பேர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.