(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரத்து 300 பஸ் வண்டிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அதுதொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரத்து 300 பஸ் வண்டிகள்  ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. தேர்தர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமையவே இந்த பஸ்வண்டிகள் வழங்கப்படுகின்றன.

வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லல், தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் போக்குவரத்து தேவைகளுக்காக இந்த பஸ்வண்டிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமைய குறிப்பிட்ட பஸ்வண்டிகள் நான்கு தினங்களுக்கு தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.

இவ்வாறு தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட இருக்கும் பஸ் வண்டிகளுக்காக, ஒரு பஸ்வண்டிக்கு நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் ரூபா அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து அறவிட இருக்கின்றது என தெரிவிக்கப்படுள்ளது.