வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, அரசு விடுமுறை தினங்களிலும் பணிபுரியும் புதுச்சேரி போக்குவரத்து பொலிஸாருக்கு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் போக்குவரத்து பொலிஸாருக்கு, புதிய சீருடைகளை அந்தந்த மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பொலிஸாருக்கு ஏற்கெனவே புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல, வழக்கமாக வெள்ளை நிற காற்சட்டை - சட்டை மற்றும் சிவப்பு நிற தொப்பி அணியும் புதுச்சேரி போக்குவரத்து பொலிஸாருக்கு, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அணிந்துகொள்ள நீலம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த டி-ஷர்ட், வெள்ளை நிற காற்சட்டை, நீல நிற தொப்பி என புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளன.