(நா.தனுஜா)

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் போது, அவரால் மிகவும் குறைந்த வயதிலேயே கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பில் எவ்விதத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை. அத்தோடு இப்பொதுமன்னிப்பு தொடர்பில் சட்டமாதிபர் திணைக்களம் மற்றும் நீதியமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகள் பெறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமைக்கு சாலிய பீரிஸ் ஏற்கனவே கண்டனம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அப்பொதுமன்னிப்பிற்கான நியாயப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டி அறிக்கையை சுட்டிக்காட்டி, அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ரோயல் பார்க் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. இக்கொலைக்குற்றவாளிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையானது நீதியமைச்சின் கீழ் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் மூவர் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் ஏற்கனவே ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரரின் தலையீட்டின் ஊடாக ஜனாதிபதிக்கும், குற்றவாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்விடுதலை குறித்து பல்வேறு மத அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதேவேளை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்கவினால் இதுதொடர்பில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது என்று ஜனாதிபதி செயலக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் கொலை இடம்பெற்ற போது குற்றவாளியின் இளம்வயது (19), சிறையில் அவர் பெற்றுக்கொண்ட புனர்வாழ்வு மற்றும் சிறையிலிருந்த காலத்தில் கல்வித்துறையில் அடைந்துகொண்ட சாதனைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதாகவும், அத்தோடு ரோயல் பார்க் கொலையானது மிகுந்த ஆத்திரத்தின் விளைவாக இடம்பெற்றது என்றும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கருணை மற்றும் இரக்கத்தின் பெறுமதியே இங்கு கருத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இவற்றிலிருந்து பின்வரும் விடயங்கள் தெளிவாகின்றன:

குற்றவாளிக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் போது, அவரால் மிகவும் குறைந்த வயதிலேயே கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பில் எவ்விதத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை.

அதேபோன்று எவ்வாறு கொலை நடந்திருக்கின்றது என்பதும் குற்றவாளியை விடுதலை செய்யும் போது கருத்திற்கொள்ளப்படவில்லை. ஏனெனில் இக்கொலையானது சடுதியாக ஏற்பட்ட கடும் ஆத்திரத்தினால் இடம்பெற்றது என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. அதுமாத்திரமன்றி கொலையானது மிகவும் கொடூரமானதும், இயல்பிற்கு முரணானதுமான வகையில் இடம்பெற்றிருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

மேலும் குற்றவாளி குறைந்த வயதினராக இருக்கின்றார் என்ற கோணத்தில் இவ்விடயத்தை அணுகமுடியாது. ஏனெனில் குறைந்த வயதில் மேலும் பல கைதிகள் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று மேலும் சில மரணதண்டனைக் கைதிகள் வயது முதிர்ந்தவர்களாக உள்ள அதேவேளை, அவர்கள் வெகுவாக நோய்வாய்ப்பட்டவர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.

அடுத்ததாக ஏனைய குற்றவாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டிருக்குமானால் அவர்களும் தமது கதைகள் மற்றும் நியாயப்பாடுகளைக் கூறியிருப்பார்கள். அவர்களும் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து பரிந்துரைகளைப் பெற்று வந்திருப்பார்கள்.

இப்பொதுமன்னிப்பு தொடர்பில் சட்டமாதிபர் திணைக்களம் மற்றும் நீதியமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகள் பெறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே குறிப்பாக இது குற்றவாளிக்கான தண்டனைக் குறைப்பல்ல. மாறாக முழுமையான விடுதலையாகவே கருதப்பட வேண்டியிருக்கிறது.