(எம்.மனோசித்ரா)

நாட்டின் தேசிய பாதுகாப்பு , அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முக்கிய செய்திகள் பொதுமக்களை விரைவாக சென்றடையும் வகையில் பாதுகாப்பு அமைச்சு புதிய குறுந்தகவல் (SMS) சேவையை ஆரம்பித்துள்ளது.

' MOD Alerts " என அறியப்படும் குறுந்தகவல் முறைமையின் ஊடாக நாட்டில் ஏற்படும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் நாடளாவிய அனர்த்தங்கள் தேசிய நலன் குறித்த செய்தி தெளிவுபடுத்தல்கள் என்பவற்றை உள்ளடக்கிய அவசரகால நிலைமைகள் தொடர்பிலான உண்மை செய்திகள் ஆகியன அறிவிக்கப்பவுள்ளன.

இப்புதிய குறுந்தகவல் சேவை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவால் இன்று வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்புதிய சேவையானது நீண்டகாலமாக உணரப்பட்ட ஒரு தேவையாகும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது. மேலும், இச்சேவையின் மூலம் பொது மக்கள் உண்மையான தகவல்களை அறிந்துகொள்வதுடன் அநாவசிய பீதி மற்றும் பதற்றத்துக்கு இட்டு செல்லும் வதந்திகள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் என்பன பரப்பப்படுவதை தடுப்பதற்கான ஒரு பயனுள்ள கருவியாக அமையும்.

இச் சேவையானது இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தின் இறுதியில் பாதுகாப்பு அமைச்சினால் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட  www.defence.lk  உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் மற்றுமொரு சேவையாகக் காணப்படுகிறமையும் குறிப்பிடதக்கது.