மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பிரதேசத்தில் கட்டுப்பாட்டை மீறிப் பயணித்து வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமாய் மறைந்த வாகனத்தைத் மூன்று நாட்களின் பின்னர் அம்பாறையில் வைத்துக் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாயமாய் மறைந்த கார்  நேற்று புதன்கிழமை மாலை அம்பாறை நகரில் கைப்பற்றப்பட்டதுடன் அதனைச் செலுத்திச் சென்ற சாரதி மட்டக்களப்பு கல்லடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று 11.11.2019 மாலை மாவடிவெம்பில் வீதிக்கட்டுப்பாடுகளை மீறி குறித்த கார் பயணித்த வேளையில் வீதி மருங்கில் நின்றிருந்த குடும்பஸ்தர் ஒருவர் காரில் மோதப்பட்டு படுகாயமடைந்து பின்னர் அன்றைய தினமே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

மேலும், கட்டுப்பாட்டை மீறிய அந்த வாகனம் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பயணிகள் பஸ்ஸையும் மோதி சேதப்படுத்திச் சென்றுள்ளது. எனினும் அந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.

எனினும், இவ்விரு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட வாகனம் மாயமாய் மறைந்திருந்த வேளையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்ளப்பு கொழும்பு நெடுஞ்சாலை வழியேயுள்ள சி.சி.ரீ.வி கெமராக்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் கார் என்றும் அவ்வாகனம் ஏறாவூர் புன்னைக்குடா வீதி, கடற்கரைத் தளவாய் வீதி வழியாகச் சென்று மட்டக்களப்பை அடைந்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அந்தக் காரைச் செலுத்திச் சென்ற சாரதி கல்லடியில் வைத்துக் கைது செய்யப்பட்டதோடு காரும் அம்பாறை நகரில் கைப்பற்றப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.