தாய்லாந்தில் நீதிமன்றத்திற்குள் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள சாந்தபுரி மாகாணத்தில் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தானின் சந்திராதிப் (வயது 67). இவருக்கு அங்கு 1,500 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக நிலம் உள்ளது.

அந்த நிலத்தின் ஒரு பகுதி தனக்கு சொந்தமானது என கூறி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மாகாண நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்காக தானின் சந்திராதிப் நீதிமன்றுக்கு வந்தார். அதே போல் இந்த வழக்கை தொடர்ந்த நபரும் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதியின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். அப்போது நில பிரச்சினை தொடர்பாக தானின் சந்திராதிப்புக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த தானின் சந்திராதிப் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, எதிர்தரப்பினரை சரமாரியாக சுட்டார்.

இதில் நிலத்தில் பங்கு இருப்பதாக வழக்கு தொடர்ந்த நபர் மற்றும் அவரது வக்கீல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து பலியாகினர். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு நீதிமன்றத்திற்குள் வந்த பொலிஸார் தானின் சந்திராதிப்பை சுட்டுக்கொன்றனர்.