தமிழகத்தில், கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் மூக்கில் புகுந்த மீன், வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் அகற்றப்பட்டது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மண்ண வேளாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார். 7ம் வகுப்பு படித்துவரும் இவர், அந்தப் பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றார்.

அங்கு, நண்பர்களுடன் சேர்ந்து கிணற்று தண்ணீரில் மூழ்கி விளையாடியபோது, அருள்குமாரின் மூக்கில் ஏதோ நுழைந்ததுபோல் இருந்துள்ளது. சிறிது நேரத்தில், மூக்கில் வலி ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து நண்பர்கள், அருள்குமாரை உடனே வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நேரம் செல்லச் செல்ல, வலி தாங்கமுடியாமல் துடித்த மகனைப் பார்த்து பெற்றோர் பதறிப்போயினர்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அருள்குமாரை அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர், மீன் ஒன்று உயிருடன்  மூக்கிற்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, டாக்டர் கதிர்வேல் மற்றும் குழுவினர் வெகுநேரம் போராடி, அருள்குமார் மூக்கிற்குள் சிக்கிக் கொண்டிருந்த ஜிலேபி மீனை வெளியே எடுத்தனர். தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.