Published by R. Kalaichelvan on 2019-11-13 21:50:17
(இராஜதுரை ஹஷான்)
தேசிய வளங்கள் பிற நாட்டவருக்கு சொந்தமாவதை தடுப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும்.

பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெற்று பலமான அரசாங்கத்தினை தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹோமாகம நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்ரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நவம்பம் 17ம் திகதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்படுவார் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.
போலியான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே ஆளும் தரப்பினர் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள்.
அமெரிக்க குடியுரிமையினை தொடர்பில் கருத்துரைப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது. இரட்டை குடியுரிமையினை பெற்ற நாட்டின் ஒரு குடியுரிமையினை இரத்து செய்தால் அவர் தாய் நாட்டின் பிரஜையாகவே கருதப்படுவார்.
நாங்கள் டி. ஏ. ராஜபக்ஷவின் பிள்ளைகள் , இலங்கையின் பிரஜைகள் அதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
மத்திய வங்கியினை கொள்ளையடித்தே நல்லாட்சி அரசாங்கம் அரச நிர்வாகத்தினை முன்னெடுத்தது. மறுபுறம் தேசிய வளங்கள் விற்கப்பட்டுள்ளது மிகுதியாகவுள்ள வளங்களையும் விற்பதற்கு இடமளிக்க முடியாது தேசிய வளங்கள் பாதுகாக்க வேண்டும்.
ஐந்து வருட ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. பலமான அரசாங்கம் இன்று தோற்றம் பெற வேண்டும். எதிர்கால தலைமுறையினரின் நலன் கருதி தற்போது அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கத்தினை தோற்கடித்து பொது தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அமோக வெற்றிப் பெறும்.
எமது தலைமையிலான அரசாங்கமே இனி தோற்றம் பெறும் என்றார்.
இந்த இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ், எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் கலந்துக் கொண்டார்கள் .