(ஆர்.யசி)

இனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் கோத்தாபய ராஜபக்ஷவையும் தேசிய பிரச்சினைகளில் வாய் திறக்காத சஜித் பிரேமதாசவையும் கொண்டு நாட்டில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியுமென இனியும் எந்த விதத்தில் மக்கள் நம்மிக்கை வைக்கின்றீர்கள்.

சஜித் -கோத்தா இருவரையும் வீழ்த்தி புதிய அரசாங்கத்தை உருவாக்க என்னுடன் கைகோருங்கள் என்கிறார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக.  

தேசிய மக்கள் சக்தியின் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் மகரகமவில் இன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இக்கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பினனர் ஒரு மாத காலமாக நாம் மக்கள் மத்தியில் சென்று எம்மை பலப்படுத்திக்கொள்ள எடுத்த முயற்சிகள் இன்று வரையில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.

 இந்த தேர்தலில் பிரதான  மூன்று முகாம்கள் உள்ளது. இன்று 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அதிக பெரும்பான்மை மக்களின் மூலம் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ஷ முகாம். 

அடுத்ததாக 62 இலட்சம் மக்களின் அங்கீகாரத்தை முழுமையாக நாசமாக்கி மக்களை ஏமாற்றிய ரணில் சஜித் சாகலவின் முகாம். மூன்றவதாக இந்த நாட்டின் சகல மக்களின் எதிர்காலத்தை பலப்படுத்த மகிழ்ச்சியை கொடுக்க, நன்மைகளை ஏற்படுத்த நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் முகாம். இந்த மூன்று முகாம்கள் மத்தியில் தான் போட்டி நிலவுகின்றது.

கடந்த காலங்களில் ஒரு குடும்ப ஆட்சியே இடம்பெற்றது. அரசியலில், பொருளாதாரத்தில், அரச துறைகளில் என அனைத்திலும் குடும்பத்திற்கான அங்கீகாரமே இருந்தது. சட்டம் நீதி துறையில் இந்த குடும்பத்தின் ஆதிக்கமே இருந்தது. 

பொருளாதாரம் முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, பாதுகாப்பு முழுமையாக ராஜபக் ஷ குடும்பத்திடம் மட்டுமே இருந்தது. பாராளுமன்றம் ராஜபக் ஷக்களின் கீழ் இருந்தது. 

சர்வதேச அளவில் ராஜபக்ஷக்கள் குற்றங்களை செய்தனர். மக்களின் சாதாரண எதிர்ப்பு ஆர்ப்பட்டன்களைக்கூட இராணுவம் மூலமாக தடுத்தனர். 

வெடிவைத்து மக்களை அடக்கினர். சிலர் கொலைசெய்யப்பட்டனர். இவர்களின் ஊழல்களை வெளிப்படுத்திய மற்றும் வெளிப்படுத்த முயற்சித்த ஊடகவியலாளர்களை கொலை செய்தனர். விளையாட்டு வீரர்கள் கொலை செய்யப்பட்டனர். 

பல ஊடகவியலாளர்களின் கை கால்கள் முறிக்கப்பட்டது. பலர் கடத்தப்பட்டனர். மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளையடித்தனர். 

அன்று நடந்த குற்றங்கள் குறித்தெல்லாம் அவர்களின் விசுவாசியான சஜின்வாஸ் இன்று வெளிப்படுத்தி வருகின்றார். இந்த குற்றங்களுக்கு எல்லாம் யார் காரணம் என கண்டறிய முடிந்தும் தடுக்கப்பட்டது. இவையெல்லாம் இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் முக்கியமான சாட்சியங்களை அது குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது தடுத்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. இவ்வாறான மோசமான ஆட்சியையே 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் தோற்கடித்தனர். 

ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்து இன்னொரு அரசாங்கத்தை அமைக்க மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த ரணில் -மைத்திரி கூட்டணி மக்களை ஏமாற்றி மக்களின் நம்பிக்கையை நாசமாக்கினர். 

ஊழல் குற்றங்களுக்கு எதிராக வருவதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் 50 நாட்களில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தனர். 11 பில்லியன் ரூபாய்களை களவெடுத்தனர். குற்றவாளிகளை தண்டிக்க கள்ளர்களை தண்டிக்க ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சியில் களவுகளும் குற்றங்களுமே இடம்பெற்றது. மத்திய வங்கியை  கொள்ளையடித்தவர்கள் யார் என்று தெரிந்தும் அவர்களுக்கு எதிராக எவரும் செயற்படவில்லை.

 ராஜபக்ஷக்கள் செய்ததை விடவும் மோசமான வகையில் இலங்கையின் நிலங்களையும் வளங்களையும் சர்வதேச நாடுகளுக்கு விற்றனர். இன்று இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் ஊழல் குற்றங்கள் குறித்து பேசுகின்றனர். 

சஜித்தும் -கோத்தாபயவும் களவுகள் ஊழல் வாதிகள் குறித்து பேசுகின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக் ஷக்களின் ஊழல் களவுகள் குறித்து பேசப்பட்டது, ஆனால் இம்முறை அரசியல் மேடைகளில் ராஜபக் ஷக்களின் களவுகள் ஊழல் மட்டும் அல்லாது ரணில் -சஜித் அணியின் ஊழல் குற்றங்களும் பேசப்படுகின்றது.  

ஊழலை பற்றி கோத்தபாய ராஜபக்ஷ பேச முன்னர் முதலில் அவராக சென்று சிறையில் தன்னை தானே சிறைப்பிடித்துக்கொண்டு நாட்டின் முதல் ஊழல் குற்றவாளியை கைதுசெய்துவிட்டோம் என கூற வேண்டும். 

ஊழல் வாதிகளை குற்றவாளிகளை தண்டிப்பேன் என சஜித் பிரேமதாச கூற முன்னர் அவரது மேடையில் உள்ள அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். 

ஆகவே ஊழல் மோசடிகள் இல்லாத தூய்மையான அணியாக நாம் மட்டுமே உள்ளோம். எம்மையே மக்கள் ஆதரிக்க வேண்டும். ஏனெனில் உண்மையாக நாட்டினையும் மக்களையும் நேசிக்கும் ஒரே அணி தேசிய மக்கள் சக்தி மட்டுமேயாகும். 

அதேபோல் எம்மை ஆதரிக்காத அல்லது இன்னமும் எம்மை ஆதரிக்க நினைக்காத அனைவரிடமும் நாம் சில விடயங்களை கேட்கிறோம். 

இனியும் ராஜபக்ஷக்களை ஆதரிக்க நீங்கள் நினைக்கும் நோக்கம் என்ன? இவ்வளவு களவுகள் குற்றங்கள் இடம்பெற்றும் கொலைகள் கடத்தல்கள் இடம்பெற்றும் இனியும் ராஜபக்ஷக்கள் தான் வேண்டும்  என மக்கள் நினைக்க காரணம் என்ன? 

நான்கரை ஆண்டுகளில் நாட்டினை நாசமாக்கிய, ஊழல் குற்றங்களை கண்முன்னே நிகழ்த்திய, நாட்டின் வளங்களை விற்று இலங்கையர்களின் வேலைவாய்ப்புக்களை சொத்துக்களை பறித்த சஜித் பிரேமதாச அணியினருக்கு வாக்களிக்க என்ன காரணம் என மக்கள் கூறுங்கள். இனியும் இவர்கள் மீது எந்த விதத்தில் நம்மிக்கை வைக்கின்றீர்கள் என்பது கூறுங்கள். 

தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை தூண்டிவிட்டு அரசியல் செய்யும் இவர்களை இனியும் ஆதரிக்க வேண்டுமா? சஹாரானுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் ஒரே வங்கிக்கணக்கில் சம்பளம் வழங்கிய கோத்தாபய ராஜபக்ஷவை இனியும் ஆதரிக்க வேண்டுமா? 

இரண்டு அடிப்படைவாத குழுக்களுக்கும் பணம் கொடுத்து சிங்கள முஸ்லிம் மக்களை தூண்டிவிடும் அரசியல் கலாசாரம் இனியும் வேண்டுமா. இவர்களால் தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியாது.

 அதேபோல் சஜித் பிரேமதாசக்களுக்கு எதற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற எந்தவொரு தேசிய பிரச்சினைகளிலும் வாய் திறக்காத நபர் எவ்வாறு தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும். நாட்டின் தேசிய பிரச்சினைகளில் எந்த தீர்வுத்திட்டமும் வழங்க தெரியாத மிகவும் கீழ்மட்ட சிந்தனை கொண்டவரே சஜித் பிரேமதாச. அவ்வாறான ஒருவரை ஜனாதிபதியாக்கி எவ்வாறு நாட்டினை கட்டியெழுப்ப முடியும். 

எனினும் எம்மால் ஆரோக்கியமான நாட்டினை கட்டியெழுப்ப முடியும். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழக்கூடிய நாட்டினை எம்மால் உருவாக்க முடியும். வடக்கு கிழக்கில் எந்த அரசியல் தரகரும் இல்லாது மக்களை சந்திக்க முடிந்த ஒரே அணி நாமே. நாம் வடக்குக்கு ஒன்றும் தெற்கிற்கு வேறொன்றும் கூறும் அணி அல்ல. தமிழ் மக்களுக்கு எதனை கூறுகின்றோமோ அதே கருத்தை தான் சிங்கள மக்களிடமும் கூறுகின்றோம். 

தெற்கில் சிங்கள வாக்குகளை பெற ஒரு பொய்யும் வடக்கில் தமிழ் வாக்குகளை பெற வேறு பொய்யும் கூற நாம் தாயரில்லை. இந்த நாட்டில் சகல மக்களுக்கும் சரியான சமமான அந்தஸ்தை வழங்கி அரசியல் செய்யும் ஒரே அணி நாம் மட்டுமே.

அதனால் மக்களிடம் பொய்களை கூற வேண்டிய அவசியம் எமக்கில்லை. தமிழ் மக்களுக்கு எதை வழங்குவோம் என்பதை தயங்காமல் சிங்களவர்களுக்கு கூறும் அரசியல்வாதிகள் நாமே. 

மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், கொலை செய்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு மக்களின் மனங்களில் வெறுப்புக்களை உருவாக்கும் ஆட்சியை நாம் செய்ய மாட்டோம். இளம் சமூகத்தை மகிழ்ச்சியாகவும் சுமைகள் இல்லாத சூழலை நாம் உருவாக்குவோம். மனிதாமிமானமும், மனித நேயமும் அன்பும் பாதுகாப்பும் நிறைந்த ஆட்சியை நாம் உருவாக்குவோம். 

பலமான மக்கள் சமூகம் கொண்ட ஆட்சியை எம்மால் உருவாக்க முடியும். பெண்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் எமது அரசாங்கத்தில் உருவாக்கப்படும். அங்கவீனர்களுக்கு மன சுமையோ பொருளாதார சுமையோ இல்லாத சூழலை எம்மால் உருவாக்க முடியும். அதற்கான விசேட வேலைத்திட்டங்கள் பல உள்ளன.

ஆனால் இன்றுவரை இலங்கையில் அவ்வாறான திட்டங்கள் இல்லை. நாம் அவ்வாறான திட்டங்களை உருவாக்குவோம். தரமான கல்வியையும் நம்பிக்கையான சுகாதார சேவையையும், வாழ்வாதாரத்தை சுமைகள் இல்லாது கொண்டுசெல்லும் தொழில் வர்க்கத்தையும் நாம் உருவாக்குவோம். எமது தேசிய விவசாயிகளை பலப்படுத்தும் இராச்சியத்தை நாம் உருவாக்குவோம்.

மக்களின் பணத்தில் ஒரு ரூபாயை கூட களவெடுக்காத ஆட்சியை நாம் உருவாக்குவோம். இந்த நாட்டினை கட்டியெழுப்பும் பலமான வேலைத்திட்டத்தினை நாம் உருவாக்குவோம். 

எமது நாட்டு மக்களுக்கான புதிய வாழ்கையை உருவாக்கிக்கொடுக்க போராடிய அணி நாமே. இன்று எமது குரல் சகல மக்களின் காதுகளிலும் கேட்கின்றது என்பதை நினைக்கும் போது நாம் பெருமைப்படுகின்றோம். மக்கள் நீங்கலாக ஒரு தீர்மானம் எடுங்கள். உங்களின் தீர்மானம் சுயாதீனமானது. ஆனால் நீங்கள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும்.

நீங்கள் எம்மை நிராகரித்தாலும் அதனால் உங்கள் மீது நாம் கோபம் கொள்ளவோ சாபமிடவோ ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம். மீண்டும் மீண்டும் உங்களிடம் வந்து இந்த நாட்டில் மாற்றம் ஒன்றினை உருவாக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம். எனினும் இம்முறை மக்கள் சரியான தீர்மானம் எடுப்பீர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.