பொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் மத வழிபாடுகள் எனும் போர்வையில் மறைமுகமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பெருந்தோட்ட தொழிலாளர்கள் காலை வேளையில் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கமாறும் தோட்ட உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

பெப்ரல் அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  அவர் மேலும் கூறியதாவது ,

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 4000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் 3000 பேர் வாக்கு எண்ணிக்கை  இடம்பெறும் நிலையங்களில் கடமையில் ஈடுபடவுள்ளனர். 

225 நடமாடும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பெருந்தோட்ட மற்றும் வடக்கு கிழக்கிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை வாக்கு எண்ணிக்கை நிலையங்களுக்காக 150 பேர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளளர். இவர்களில் 6 பேர் வீதம் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமான தேர்தல் அமைதி காலத்தில் அமைதிகாக்குமாறும் வாக்காளர்களுக்கு எந்தவித தாக்கம் ஏற்படாத வகையிலும் செய்திகளை வெளியிடுமாறு இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கிணங்க அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் செயற்படும் என நம்புகின்றோம். இது தொடர்பில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது சிரமமான பணியாகும். இருப்பினும் பெப்ரல் அமைப்பு சமூக ஊடக நிர்வாகிகளுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒவ்வொரு இரண்டு மணித்தியாலயத்திற்கும் சமூக ஊடக நிர்வாகிகள் சமூக ஊடகங்களின் தேர்தல் செயற்பாடு பற்றி எமக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அவ்வறிக்கையை நாம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளோம். அவ்வறிக்கை தொடர்பில் ஆணைக்குழு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

இதுவரை சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பில் 156 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , 85 முறைப்பாடுகளை சமூக ஊடக நிர்வாகிக்கு தெரிவித்துள்ளோம். இது தொடர்பில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் சம்பந்தமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

மதத்தலங்கள் தேர்தல் தொடர்பில் நடுநிலை வகித்து செயற்பட வேண்டும். விகாரைகளில் எந்த கட்சிகள் சார்பிலும் விசேட பூஜைகள் எதுவும் நடத்த கூடாது என்று வேண்டிக் கொள்கின்றோம்.

வாக்காளர்கள் தற்காலிக அடையாள அட்டை உட்பட 6 விதமான அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குரிமையை உறுதிப்படுத்தக் கூடிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவும்.

இம்முறை வேட்பாளர்களின் தொகை அதிகம் என்பதனால் வாக்குச் சீட்டின் நீளமும் அதிகரித்துள்ளது. அனைத்து வாக்காளர்களும் காலையிலேயே சென்று வாக்களிப்பது சிறந்து. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இம்முறை காலையிலேயே வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தோட்ட உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இம்முறை வாக்குச் சீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் வாக்களிப்பு நிலையங்களில் நெரிசல்களும் ஏற்படலாம்.

அதேவேளை கொழும்பில் வீதியோரங்களில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அவர்களுக்கு வாக்களிப்பதற்கான விடுமுறையை வழங்கவேணடும். இல்லை என்றால் அவர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போகும். இவ்வாறு அவதானமின்றி செயற்படும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.