(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சி  தலைமையிலான அரசாங்கத்தின் நான்கரை வருட  கால முறைக்கேடுகளை மீள் நினைவுப்படுத்தி மக்கள் ஜனாதிபதி தேர்தலில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் இன்று இன, மத , மொழி வேறுப்பாடு இன்றி பலமான அரசாங்கத்தினை தோற்றுவிப்பார்கள் என எதிர்க்கட்சி  தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

திஸ்ஸமஹராம நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்த காலத்தில் இருந்து நாடு பாரிய அழிவுகளை எதிர்க் கொண்டது.

இதுவே 2015 ஆம் ஆண்டும் தொடர்ந்தது. அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மக்கள் பெரிதும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பல்வேறு   வாக்குறுதிகளை குறிப்பிட்டுள்ளார்.

போலியான  வாக்குறுதிகளினால் மீண்டும்  ஆட்சி மாற்றத்தினை ஒருபோதும்  ஏற்படுத்த முடியாது. அரசியல் தீர்மானத்தினை மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதனை  நவம்பர் 18ம் திகதி அறிந்துக் கொள்ளலாம்.

ஐக்கிய தேசிய கட்சியின்  நிர்வாகமே கடந்த  நான்கரை வருட காலமாக காணப்பட்டது. 

இடைப்பட்ட காலத்தில் நாடு எதிர்க் கொண்ட அழிவுகளை மீள்நினைவுப்படுத்தி மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு  பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளை வேறுப்படுத்தி முன்னெடுக்க மாட்டோம் அனைத்து பிரதேசங்களுக்கும் ஒருமித்த வகையிலான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்.

 நாட்டு மக்கள் அனைவரும் இன்று இன, மத, மொழி பேதங்களை துறந்து  பலமான அரசாங்கத்தினை  ஏற்படுத்த  தீர்மானித்துள்ளார்கள். போலியான சேறுபூசல்களுக்கு இனியும் இடம் கிடையாது. 

நிச்சயம் பொதுஜன பெரமுனவின் தலைமையிலான  அரசாங்கமே தோற்றம் பெறும் என்றார்.