(ஆர்.விதுஷா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்த வெற்றியை சீர்குலைக்க உள்நாட்டு ,வெளிநாட்டு சக்திகள் சூழ்ச்சி செய்யலாம்.ஆகவே வாக்காளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சியின்   பதில்  தலைவர்  பேராசிரியர்  றோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவருடைய தந்தையின் வழியை    தொடரப்போவதாககூறுகின்றார். 

அவ்வாறெனின்  அவருடைய தந்தையின் ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற விடயங்கள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்  எனவும் சுட்டிக்காட்டினார்.

சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது  ,

தேர்தல்  பிரச்சார நடவடிக்கைகள்  இன்று முற்றுப்பெற்றுள்ளது.  அனைத்து பிரசார நடவடிக்கைகளின்  போதும் தமிழ்  சிங்கள  முஸ்லிம்  மக்களின்  ஆதரவு  எமக்கு  வலுவாக  கிடைக்கப்பெற்றது. 

அந்த வகையில் அனைத்து பிரசாசர நடவடிக்கைகளும் சுமுகமான முறையில் நிறைவடைந்துள்ளன. 

அத்துடன், விவசாயிகள், கடற்றொழிலாளர் உள்ளிட்ட அனைத்து துறை சார் மக்களுடைய பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி  அவர்களுடைய பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருந்தோம்.  இந்நிலையில்  , எதிர்த்ரப்பினரால்  அதற்கு சேறு பூசும் விதத்திலான கருத்துக்கள் பல முன்வைக்கப்பட்டன.

நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர். 

அந்த பிரச்சினைகளை தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொடுக்கும் எண்ணம் இவ்வாறு சேறுபூசும் வகையிலான  செயற்பாடுகளை முன்னெடுப்வர்களிடத்தில் இல்லை என்றே கூற முடியும்.

அத்துடன், வெள்ளைவான் கலாசாரம,அரச பயங்கரவாதம் , ஆகியன தொடர்பாக பேசி எமது வேட்பாளருக்கு எதிராக சேறுபூச  நினைக்கின்றனர். எமது வெற்றிக்கு பின்னர் இவ்வாறு எந்த ஒரு நடவடிக்கையும் இடம் பெறப்போவதில்லை. 

சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தார். அந்த வகையில் அவரும் கோத்தா பயராஜபக்ஷ வெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றார் . 

அவரும் கோத்தாவின் வெற்றியை எதிர்பார்க்கின்றார். கோத்தாபய நிச்சயமாக இந்த தேர்தலில் வெற்றிபெறுவார். 

ஆயினும் அவருடைய வெற்றியை சீர்குலைக்கும் வகையிலான சூழ்ச்சிகள் எதிர்வரும் தினங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள்  அதிகளவில் உள்ளது. ஆயினும் , வாக்காளர்கள் அவதானத்துடன் செயற்படுவார்கள் என நம்புகின்றோம்.  

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன போதைப்பொருளை நாட்டிலிருந்து பூரணமாக இல்லாதொழித்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்களை  மேற்கொண்டிருந்தார். 

அந்த வகையில் கோத்தாபயவின் வெற்றிக்கு  பின்னர் இந்த நடவடிக்கைகளை அவரும் தொடர்ந்து முன்னெடுப்பார் என  எதிர்பார்க்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.