(இராஜதுரை ஹஷான்)

தேசிய  பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் நபரை மக்கள்  ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.

மக்களின்  பாதுகாப்பினை பிறிதொருவருக்கு  வழங்குவதாக  புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார்.

தேசிய பாதுகாப்பினை பிறருக்கு  கையளித்ததன் விளைவையே  நாம்  இன்று எதிர்க் கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

 கொழும்பில் நேற்று  இரவு இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் பாரம்பரிய அரசியல் முறைமையில் இருந்து விடுப்பட வேண்டும். நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள நிலைமையினை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் சிறந்த அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள  வேண்டும்.

நாடு எதிர்க் கொண்டுள்ள  நெருக்கடி நிலைமையினை  கருத்திற் கொண்டு தேர்தல் கொள்னை பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.  தேவையற்ற விடயங்கள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை. ஆகையால் திட்டங்களை  துரிதகரமாக நிறைவேற்றலாம் என்பதிற்கு உத்தரவாதம் வழங்க முடியும்.

நாட்டு மக்களின் பாதுகாப்பினை  தான் பொறுப்பேற்பதாக   பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். அரசியலமைப்பின் பிரகாரம்  ஆயுதமேந்திய முப்படைகளின் தலைவராக  நாட்டின் தலைவர் செயற்பட வேண்டும்.

பாதுகாப்பு  சார் கடமைகள்  மற்றும் பொறுப்புக்களை ஒருபோதும் பிறருக்கு கையளிக்க முடியாது. ஆனால் ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களுக்கு அப்பாற் சென்று செயற்பட முனைகின்றார்.

தேசிய பாதுகாப்பின் பொறுப்புக்களை  பீல்ட்மார்ஷல  சரத் பொன்சேகாவிற்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளமை பொறுத்தமற்றது.

தேசிய பாதுகாப்பினை நடப்பு அரசாங்கம் பிறிதொரு தரப்பினருக்கு வழங்கியதன்  பெறுபேற்றினை நாடு இன்று எதிர்க் கொள்கின்றது. ஆகவே நாட்டு மக்கள்  இவ்வாறான  யதார்த்தமற்ற கருத்துக்களுக்கு முக்கியத்தும் செலுத்த வேண்டாம்.

நாடு  எதிர்க் கொண்டுள்ள நிலைமையினையும், அதில் இருந்து மீளும் வழிமுறையினையும் கருத்திற் கொண்டு மக்கள்  வாக்குரிமையினை பயன்படுத்த வேண்டும்.

தவறான அரசாங்கத்தினை தோற்றுவித்து பின்னர்  வாக்குரிமையினை நிந்தித்துக் கொள்வதால் எவ்வித மாற்றமும்  ஏற்படாது. 2015ம் ஆண்டு  அரசியல் ரீதியில் செய்த தவறை  இம்முறை அனைவரும் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.