(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் அமெரிக்காவிடமே இருக்கிறது.

அதற்கேற்றாட் போல சர்வதேச அரசியல் நோக்கத்திற்காகவே அமெரிக்காவோ அல்லது அமெரிக்க தூதரகமோ கோத்தாபயவின் குடியுரிமை விவகாரத்தில் அமைதி காக்கிறது என்று அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த சந்தர்பத்தில் அப்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக காணப்பட்ட ரொபட் ஓ பிளேகுடன் எக்சா ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. 

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இந்த ஒப்பந்தமே யுத்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 

அதன் போது ரொபட் ஓ பிளேக் அப்போது கோத்தாபயவை அமெரிக்காவின் சிறந்த சகோதரர் நண்பர் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார். 

அதே நிலைமையே தற்போதும் காணப்படுகிறது. இதனலேயே கோத்தாவின் எதிர்காலம் அமெரிக்கா வசமிருக்கிறது என்று கூறுகின்றோம். 

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர் அதாவது ஏப்ரல் 17 ஆம்திகதி கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கு விண்ணப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

 அதனைத் தொடந்து உயிரத்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கோத்தாபய தனியார் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குடியுரிமை விவகாரத்தில் 99 வீதம் பிரச்சினைகள் நிறைவடைந்ததாகக் கூறியிருந்தார். 

அத்தோடு அவரது இரட்டை பிரஜாவுரிமையை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் , இரட்டை குடியுரிமையைப் பெற்றுக் கொண்டமையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டமை தொடர்பில் தற்போதும் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைரகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

எனவே கோத்தாபயவின் குடியுரிமை விவகாரம் பிரச்சினைக்குரியதாகவே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததாகும். 

அத்தோடு கடந்த வாரம் அலி சப்ரி உள்ளிட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதில் ' கோத்தாபயவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்பித்திருக்கிறோம் ' என்று கூறினர். எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதிலிருந்தும் அவர் இலங்கை பிரஜையா அமெரிக்க பிரஜையா என்ற சிக்கல் இருப்பது தெளிவாகிறது. 

எவ்வாறிருப்பினும் கோத்தாபயவின் குடியுரிமை விவகாரத்தை பெரிதுபடுத்தி அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்வது எமது நோக்கமல்ல.

ஆனால் எதிர்பாராத விதமாக கோத்தாபய தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டின் நீதித்துறை சட்டம் இறைமை என்பன கேள்விக்குறியாக்கப்படும். அமெரிக்க பிரஜை ஒருவர் நாட்டை ஆட்சி செய்வதென்பது சாதாரண விடயமாகாது. அது மிகப் பாரதூரமானதாகும். 

மேலும் கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் தலைவராக வேண்டும் என்று தீர்மானித்த போதே தன்னை அதற்கு தகுதியானவராக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்கின்ற தினத்தன்று தான் இலங்கையன் என்ற உறுதியுடன் இருந்திருக் க வேண்டும். எனினும் அவர் அவ்வாறு இல்லை. இவற்றை நன்கு உணர்ந்து மக்கள் சிறந்தவொரு தீர்மான்ததை இம்முறை தேர்தலில் எடுக்க வேண்டும் என்றார்.