பூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப் வாகனத்தில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட 4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. 

பூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப் வாகனத்தில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ் நிலைய புலனாய்வினரிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பூநகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசாரால் சோதனையிடப்பட்டபோது குறித்த மர குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கப் வாகனத்தில் ஏற்றப்பட்ட 17 மர குற்றிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் மன்னார் வீதி ஊடாக அனுமதிப்பத்திரம் இல்லாது எடுத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவை மீட்கப்பட்டுள்ளன. 

சம்பவத்தில் வாகனத்தைச் செலுத்திய சாரதி தப்பி ஓடிய நிலையில் சாரதியைக் கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.