Published by T. Saranya on 2019-11-13 12:10:08
சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற நேரடி இசை நிகழ்ச்சியொன்றின் போது நபரொருவர் நடத்திய கத்திக் குத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கிங் அப்துல்லா பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மேற்படி அரங்க மேடையில் ஏறிய 33 வயதான யேமனிய பிரஜையொருவர் அங்கு இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த கலைஞர்கள் மீது கண்மூடித்தனமாக கத்திக் குத்தை நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இரு ஆண்களும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாகவும் அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது அறியப்படவில்லை.
சவூதி அரேபியாவில் இதற்கு முன்னர் இசைநிகழ்ச்சி உள்ளடங்கலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் சல்மானால் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு பொதுப் பொழுதுபோக்கு சபையானது மேற்படி துறைக்கு எதிர்வரும் ஒரு தசாப்த காலத்தில் 64 பில்லியன் டொலர் முதலீட்டை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.