எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பு வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்று அவர் தலைமையிலான அரசாங்கம் அமையும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையின் கீழ் அதியுச்ச அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி யின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே    அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

செவ்வியின் விபரம் வருமாறு,

கேள்வி : பிரசார பணிகள் முடிகின்றன. உங்கள் வேட்பாளரின் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது?

பதில்: இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப்போகின்ற மக்கள் சஜித் பிரேமதாச யார், அவர் எவ்வாறான கொள் கைகளை கொண்டவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாச ஒரு இனவாதியல்ல, மத வாதியுமல்ல. அவர் அனைத்து இனங்களையும் மதங்க ளையும் நேசிக்கும் ஒரு தலைவர். இதே வேளை எமது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் யார் அவரது கொள்கைகள் என்ன? கடந்தகாலம் எவ்வாறு இருந்தது என்பதனையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்த் தரப்பினர் இனவாத பிரசாரங்களை முன்னெடுத்து பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர். அதற்கு இடமளிக்க முடியாது. நாம் இந்த நாட்டில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கி புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். ஆனால் அதனை குழப்புவதற்கு எதிரணி முயற்சிக்கிறது.

அந்த அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அரசியல் மையப்படுத்த முயற்சிக்கின்றனர். யாருக்கும் அநீதி ஏற்படாத ஒரு நாட்டை கட்டியெழுப் புவோம். ஊழல் வாதிகளுக்கு இடமில்லை என்று சஜித் தெரிவித்திருக்கின்றார். இது ஒரு முக்கியமான விடயமாகும்.

கேள்வி : சஜித் பிரேமதாசவின் ஆட்சி அமையும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

பதில்: நிச்சயமாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். ஒற் றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதி காரப்பகிர்வு வழங்கப்படும். எனது தந்தை அதற்காகவே போராடினார். நாமும் அதற்கான அழுத்தத்தை கட்டாயம் பிர யோகிப்போம்.

அனைத்து மக்களும் சுதந் திரமாக வாழும் சூழல் உருவாக்கப்படும். ஆனால் எதிர்த்தரப்பு வேட்பாளர் வெற்றி பெற்றால் அரசியல் தீர்வு உள்ளிட்ட எதுவும் கிடைக் காது.

கேள்வி : கடந்த நான்கரை வருடகால நிலைமை குறித்து நீங்கள் மகிழ்ச்சியில் இல்லை என்பது தெரிகிறது. அது எதிர் காலத்திலும் தொடருமா?

பதில்: கடந்த நான்கரை வருடங்களாக இந்நாட்டின் தலைவர் நாட்டை பின் நோக்கி எடுத்துச் சென்றார். அதனால் நாம் விரக்தியடைந்தோம். ஆனால் இம்முறை நாம் துடிப்புள்ள செயற்றிறன் மிக்க நேர்மையான அரசியல் தலைவரை களமிறக்கியுள்ளோம். எனவே அந்த நிலைமை தொடராது என நம்புகிறோம்.

கேள்வி:  2015ஆம் ஆண்டில் எடுத்த தீர்மானம் குறித்து கவலையடைகிறீர்களா?

பதில்: ஆம். அந்த தீர்மானம் தொடர்பில் நாம் கவலையடைகிறோம். அப்போது இவ் வாறான ஒரு நிலை ஏற்படும் என்று எங்க ளுக்கு தெரியவில்லை.   அதனால் விரக்தி யடைகிறோம்.  

கேள்வி : சஜித் வென்றால் பிரதமர் மாற் றப்படுவாரா?

பதில்: அது அந்தநேரத்தில் பார்க்க வேண் டிய விடயம். பாராளுமன்றத்தில் ஆதரவைக் கொண்டவர் பிரதமராக நியமிக்கப்படுவார். தற்போது பாராளுமன்றத்தில் அதிக ஆதரவைப் பெற்றவராக பிரதமர் ரணில் இருக்கிறார். அதனால் ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் பார்க்கலாம்.

கேள்வி : உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்ப டும்?

பதில்: எமது கத்தோலிக்க மக்களுக்கு இந்த நாட்டில் ஒரு அநீதி இடம்பெற்றது. அதனால் மக்கள்   பாதிக்கப்பட்டனர். எனவே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான நாடு வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி யாரும் அரசியல் செய்ய இடமளிக்க முடியாது.

இதேவேளை எமது அரசாங்கத்தில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த முழுமையான அதிகாரம் கொண்ட ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படும். இதன்போது சம்பவத்துடன் தொடர்புடை யவர்கள்  பொறுப்பை தட்டிக்கழித்தவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.