(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் 18 ஆம் திகதி பல்வேறு விடயங்களை மக்களுக்கு தெரிவிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான சிலருடன் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதாகவும், கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் மேற்கொண்ட சில தீர்மானங்கள் தொடர்பாக கவலை தெரிவித்ததாகவும், நவம்பர் மாதம் 18 ஆம் திகதி இந்த அனைத்து விடயங்களையும் மக்களுக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை.

மேலும் எந்தவொரு தரப்பினரும் தேர்தலின் இறுதி சில நாட்களுக்குள் ஜனாதிபதி  தொடர்பாக இத்தகைய போலியான செய்திகளை உருவாக்கி பிரச்சாரம் செய்வது குறித்து ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.