இந்து குடும்பத்தினரின் திருமண விழாவிற்காக, மிலாடி நபி கொண்டாட்டங்களை ஒரு வாரம் தள்ளி வைத்த மசூதி நிர்வாகிகளின் செயல்,  மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள செம்மாங்குழியைச் சேர்ந்தவர் நாராயணன் நம்பியார் - இந்திரா. இவர்களுடைய மகள் பிரதியுக்‌ஷா (22). இவர்களின் வீடு, செம்மாங்குழி இடிவேட்டி ஜூம்மா மசூதியின் சுமார் 4 மீட்டர் இடைவெளியில் உள்ளது.

மசூதியில், வழிபாடு மற்றும் தொழுகைகள் நடக்கும்போது அதில் கலந்துகொள்ள வருகைதரும் முஸ்லிம் மக்களுடன், நாராயணன் நம்பியாரின் குடும்பத்தினர் நல்ல நட்பையே கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நாராயணன் நம்பியாரின் மகள் பிரதியுக்‌ஷாவுக்கும், பாலாரியைச் சேர்ந்த வினு பிரசாத் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நவம்பர் 10-ம் திகதி திருமணம் நடத்த உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை பிரதியுக்‌ஷா உறவினர்கள் தடல்புடலாக செய்து வந்தனர். 

இதனிடையே, வீட்டின் அருகே உள்ள மசூதியும் 10ம் திகதி கொண்டாடப்படவுள்ள மிலாடி நபிக்காக தயாராகி வந்தது. அப்போது மசூதி நிர்வாகிகள், ‘மிலாடி நபி கொண்டாட்டம், பிரதியுக்‌ஷா - வினு பிரசாத் திருமண விழாவை பாதிக்கக்கூடும்’ என்பதை உணர்ந்தனர்.

ஆனால், இதுகுறித்து பிரதியுக்‌ஷா குடும்பத்தினரிடமிருந்து எந்த கோரிக்கையும் வராத நிலையிலும், மசூதி நிர்வாகிகள் இதுபற்றி கூடி ஆலோசித்தனர். பின்னர் அவர்கள், பிரதியுக்‌ஷா திருமணத்திற்காக மசூதியில் நடக்க இருந்த மிலாடி நபி கொண்டாட்டத்தை வருகிற 17-ம் தேதிக்கு தள்ளி வைக்க முடிவு செய்தனர். இந்த தகவலை பிரதியுக்‌ஷா குடும்பத்தினரிடம் தெரிவித்து, திருமண விழாவை சிறப்பாக நடத்தும்படி வாழ்த்தினர்.

திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் பிரதியுக்‌ஷா தனது கணவர் வினு பிரசாத் மற்றும் உறவினர்களுடன் சென்று மசூதி நிர்வாகிகளை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.

இதுகுறித்து மசூதி செயலாளர் அப்துர் ரகுமான் கூறும்போது, “திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வு. மிலாடி நபி கொண்டாட்டம் அதற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று மசூதி நிர்வாகிகள் முடிவு செய்தோம். எனவேதான் திருமணத்திற்காக மிலாடி நபி விழாவை ஒருவாரம் தள்ளி வைத்தோம்” என்றார்.

பிரதியுக்‌ஷாவின் தாய் இந்திரா கூறுகையில், “கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் மசூதிக்கு வருபவர்களுடன் நல்ல உறவை பேணுகிறோம். நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கவில்லை என்றபோதிலும், அவர்களாகவே முன்வந்து கொண்டாட்டங்களை தள்ளி வைத்ததுடன், அனைத்து உறுப்பினர்களும் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தனர்" என்றார்.

இந்து தம்பதியின் திருமணத்திற்காக மிலாடி நபி விழா தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுவதுடன் மசூதி நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் குவிகிறது.