தற்காலிக அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதிநாள் இன்றுடன் நிறைவு பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித்தினம் இன்றாகும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

எக் காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியாக கடந்த 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வாக்காளர்களின் நலன்கருதி கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இதுவரை தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்கள், இன்று நள்ளிரவுக்குள் கிராம உத்தியோகத்தரிடமோ, அல்லது தோட்ட முகாமையாளரிடமோ அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கும்போது ஆள் அடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணமாக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிசெய்யும் கடிதமும் வாக்களிப்பின்போது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணம் என்ற ரீதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.