அறிமுக இயக்குனர் ரமணா புருஷோத்தமா இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கிறார் நடிகர் பொபி சிம்ஹா.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, ‘அக்னி தேவி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் பொபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை அறிமுக இயக்குனர் ரமணா புருஷோத்தமா இயக்குகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற படத்தில் அறிமுகமான நடிகை காஷ்மீரா பர்தேசி நடிக்கிறார். 

இந்தப் படத்திற்கு ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார். டிசம்பர் முதலாம் திகதியன்று சென்னை மற்றும் மூணாறில் படப்பிடிப்பு தொடங்கும் இந்த எக்சன் திரில்லர் படத்தை, தன்னுடைய மூத்த மகளான முத்ரா பெயரில் பட நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதற்கு தன்னுடைய மனைவியும், நடிகையுமான ரேஷ்மி மேனனை தயாரிப்பாளராக்கி தயாரிக்கிறார் பொபி சிம்ஹா.

அண்மையில் ஆண் குழந்தை ஒன்றுக்கும் தந்தையாகி இருக்கும் இந்த நட்சத்திர தம்பதியினர், புதிய படத்தை பட நிறுவனத்தைத் தொடங்கி படத்தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதை திரையுலகினர் வரவேற்கிறார்கள்.

இதனிடையே பொபி சிம்ஹா தயாரிப்பில், ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற படமும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என்பதும், நடிகர் பொபி சிம்ஹா தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்திலும், ரவி தேஜா நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.