மக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று 12-11-2019 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவரும் சமத்துவமாக வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.  ஆனால் நாட்டில் உள்ள  இரண்டு பிரதான  கட்சிகளும் அதற்கு மாறாக இனவாதத்தை தொடர்ந்தும் பேசி பேசி இனங்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்  பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையினை தெற்கில் மிக மோசமான இனவாதத்தோடு பேசி வருகின்ற மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்தியில் உண்மையை பேசி நாட்டை அமைதி பாதைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக இனவாத்தை பேசி அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்..

எமது மக்களும் 71 வருடங்களாக தோற்றுப் போன அரசியல் பாதையினை மாறி மாறி தெரிவு செய்து வருகின்றனர். இந்த அரசியல் பாதையில் நாட்டின் சாதாரன குடிமக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அதிகாரங்களுக்கு வருகின்றவர்களின் பிள்ளைகள் குடும்பங்கள், உறவினர்கள் வாழ்க்கை மட்டுமே வளர்ச்சி அடைந்து சென்றிருக்கிறது. இந்த நிலைமையினை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர்

இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த மக்கள் எதிர்வரும் 16 திகதியை பயன்படு்த்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்