(எம்.ஆர்.எம்.வஸீம்)

உங்களுக்கு இறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

குருணாகல் குளியாபிட்டிய நகரில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

எமது எதிர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ் புத்ததர்மத்தை எவ்வாறு போஷிக்கப்போகின்றார் என்பதை அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கின்றார். அதாவது, தேர்தல் விஞ்ஞாபனத்தின் 44 ஆவது பக்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் இறைச்சிக்கடை ஆரம்பித்து அதனை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

அவரின் இந்த நடவடிக்கையானது, கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியானாலும் அவரது வெள்ளைவேன் கலாசாரத்தை கைவிடமாட்டார். இறைச்சிக்கடைக்கும் வெள்ளைவேனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று கேட்கின்றேன்.

ஆனால் சஜித் பிரேமதாச ஒவ்வொரு கிராமசேவகர் பிரதேசத்திலும் தொழில் பேட்டைகளை அமைத்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றார். அப்படியாயின் உங்களுக்கு இறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.